பெஞ்சல்' நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள்... பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, வேளாண்மை இணை இயக்குநர் சத்திய மூர்த்தி, தோட்டக்கலை துணை இயக்குநர் சிவக்குமார், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மயில்வாகனன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலா ளர் நந்தகுமார் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

கோரிக்கைகள்



இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதில் அவர்கள் கூறியதாவது:

சங்கராபுரம் மற்றும் கல்வராயன்மலை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் நோய் தாக்குதல் அதிகம் உள்ளது. அதனால் கடந்தாண்டை போல நடப்பாண்டும் பூச்சிக்கொல்லி மருந்து வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் காய்கறி மொத்த விற்பனை மையம் அமைக்க வேண்டும்.

ஜவ்வரிசி விலை குறைவால் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர், எனவே ரேஷன் கடைகள் மூலமாக ஜவ்வரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வராயன்மலை பகுதியில் விளைவிக்கப்படும் தக்காளியை வெளி பகுதிக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

அதனால் அரசு சார்பில் குளிரூட்டப்பட்ட வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பயோ மெட்ரிக் முறையில் அலுவலர்களின் வருகைப் பதிவை கண்காணிக்க வேண்டும்.

மலைவாழ்மக்களுக்கு 'பவர் டிரில்லர்' இயந்திரம் மானியத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

வாணாபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். தொழுவந்தாங்கலில் 50 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மின் கம்பங்களை மாற்ற வேண்டும்.

கால்நடைத்துறையில் மாவட்ட இணை இயக்குநர் மற்றும் நோய்புலனாய்வு துறை உதவி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கி, அலுவலரை நியமிக்க வேண்டும்.

அனைத்து ஒன்றியங்களுக்கும் கால்நடைத்துறை ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலருக்கு இதுவரை நிவாரண தொகை கிடைக்கவில்லை. மாடூர் ஏரி ஆக்கிரமிப்பில் உள்ளது.

போதுமான உலர்களங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மூங்கில்துறைப்பட்டில் உள்ள சர்க்கரை ஆலையில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே கரும்பு அரவை துவக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கலெக்டர் எச்சரிக்கை



இதைத்தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:

இந்த கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, பதிலளிக்க வேண்டும்.

புகார் மீது நடவடிக்கை எடுக்காமலும், பதிலளிக்காமலும் இருப்பதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement