சட்டம் ஒழுங்கு பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்க வேண்டும்; ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல், பஞ்சமி நிலம், பஸ்கள் இயக்கம், காவல் மையம் அமைத்தல், இரவு ரோந்து பணி, முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விபரம், ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சட்டம் ஒழுங்கு நேர்வுகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து அமைதியை நிலைநாட்டும் வகையில் தாமதமின்றி உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் துணை ஆட்சியர் ஆனந்த்குமார் சிங் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement