தீவிரவாத கூடாரம் அழித்து ஒழிக்கப்படுமா? பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி பி.ஓ.கே.,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (பி.ஓ.கே.,) இந்தியாவுடன் இணைப்பது தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு நிரந்தர தீர்வு என்ற கோஷம் மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது. இந்தியாவிற்கான இஸ்ரேலின் துாதர் ரூவன் அசார், ஜம்மு- - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை, 2023அக்., 7ல் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணியர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு, நிகரானது காஷ்மீர் தாக்குதல்.
பாக்., மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயல்களிலும் பொதுமக்களை குறிவைப்பதிலும், மத ரீதியாக எச்சரிக்கை செய்வதிலும், ஒற்றுமைகள் உள்ளன.
பயங்கரவாதிகள் அனைத்து மட்டங்களிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். தங்கள் செய்கையை ஒருவருக்கொருவர் நகலெடுக்க முயற்சிக்கின்றனர். அவர்களைத் தோற்கடிக்க உளவுத்துறை அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்கும், இஸ்ரேல் தாக்குதலுக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. அப்பாவி சுற்றுலாப் பயணியர் பஹல்காமில் தங்கள் விடுமுறையை அனுபவித்துக்கொண்டிருந்தனர். இஸ்ரேலில், மக்கள் ஒரு இசை விழாவைக் கொண்டாடி கொண்டிருந்தனர்.
பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், ஹமாஸ் தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் ஜெய்ஷ்--இ--முகமது பயங்கரவாதிகளைச் சந்தித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இது ஓர் உதாரணம். இதேபோல், பல்வேறு சர்வதேச தீவிரவாதிகளின் கூடாரமாக பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு இப்பகுதியை பாக்., ஆசியுடன் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் சூளுரை
''நமது நாட்டுக்கு எதிராக பயங்கரவாதிகள் பயன்படுத்தும், நமது எஞ்சிய அந்த துண்டு நிலத்தை அழித்து ஒழித்து பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்,'' என, பிரதமர் மோடி சமீபத்தில் அறை கூவல் விடுத்திருந்தார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ஆட்சியாளர்கள் செய்த வரலாற்றுப் பிழைக்கு பிராயசித்தமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்க பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் முக்கிய அஜண்டாவாக பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான நடவடிக்கை இருக்கும் என முந்தைய காலங்களில் உறுதி கூறப்பட்டு வந்தது. அதற்கான நாள் நெருங்கி விட்டதாக தற்போது பேச்சு எழுந்துள்ளது.
பிர் பஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ள ஹாஜி பிர் கணவாய், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட்டுடன் இணைக்கிறது. 8,652 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கணவாய், பி.ஓ.கே., பள்ளத்தாக்கை நோக்கிச் செல்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு முக்கிய ஊடுருவல் பாதைகளில் ஒன்றாக, இது செயல்படுகிறது.
இது பூஞ்ச்மற்றும் யூரி இடையேயான சாலை துாரத்தை, 282 கி.மீ.,யில் இருந்து 56 கி.மீ.,யாக குறைக்கிறது. கடந்த 1965 போரின்போது,ஹாஜி பிர் கணவாயை இந்தியா கைப்பற்றியது. 1966 ஜனவரியில் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்படி, இந்தக் கணவாய் பாகிஸ்தானிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஹாஜி பிர் கணவாய் ஒரு சர்ச்சைக்குரிய இடமாகவும், இரு நாடுகள் இடையே எப்போதும் மோதலுக்கான முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
-நமது நிருபர்-









மேலும்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!