இனி பயங்கரவாதிகள் தான் பயந்து நடுங்க வேண்டும்! 'பாதுகாப்பான இந்தியா' அமைய பல்லவி மஞ்சுநாத் விருப்பம்

''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை வேட்டையாடினர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பாதுகாப்பான இந்தியா தான் நமக்கு வேண்டும்,'' என, காஷ்மீரில் கொல்லப்பட்ட கர்நாடக தொழிலதிபர் மஞ்சுநாத்தின் மனைவி பல்லவி கூறினார்.
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமடைந்தனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் என்பவரும் ஒருவர். இவரது மனைவி பல்லவி மற்றும் மகனுடன் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றார்.
பயங்கரவாதிகள் நடத்திய மனித வேட்டை குறித்து, பல்லவி கூறிய கருத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரை கொன்றபோது, தங்களையும் கொன்று விடுங்கள் என பல்லவி மன்றாடினார். அப்போது பயங்கரவாதிகள், 'உங்களை கொல்ல முடியாது. மோடியுடன் போய் சொல்' என கொக்கரித்தனர்.
பிரதமர் மோடிக்கு பகிரங்க மிரட்டல் விடுப்பது தான், பயங்கரவாதிகள் நாட்டுக்கு சொல்ல வந்த சேதி. நாட்டின் பிரதமருக்கு எதிராக, அரசு நிர்வாகத்துக்கு எதிராக பயங்கரவாத குரல் ஓங்கி ஒலித்ததற்கு, சாட்சியான பல்லவி, ஏப்., 22ல் பஹல்காமில் நடந்த கோர கொலையை விவரிக்கிறார்.
பத்திரிகையாளர் ஆர்னாப் கோஸ்வாமிக்கு அவர் அளித்த பேட்டி: நாங்கள் மூன்று பேர் - நான், எனது கணவன், மகன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றோம். பஹல்காமில் இருக்கிறோம். பகல் 1.30 மணி என நினைக்கிறேன். திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அது ஒரு பயங்கரவாத தாக்குதல் என தெரியாது. அது ஒரு கெட்ட கனவு.
நாங்கள் நின்ற பகுதியில் திடீரென நான்கு பயங்கரவாதிகள் வந்தனர். என் கணவர் சுதாரித்து, எங்களை பார்த்து, 'நீங்கள் இங்கிருந்து சென்றுவிடுங்கள்' என கூறினார்.
அதற்குள் பயங்கரவாதிகள், என் கண் முன்னே கணவரை சுட்டுக்கொன்றனர். அப்போது நான், 'என் கணவரை கொன்று விட்டீர்கள்... எங்களையும் கொன்று விடுங்கள்' என்றேன். உடனே அங்கிருந்த ஒரு பயங்கரவாதி, ஹிந்தியில், 'நஹின் மாரங்கே... தும் மோடி கோ ஜாகே போலோ (நான் உன்னை கொல்ல மாட்டேன். மோடியிடம் போய் சொல்)' என்றார்.
பின்னர், பயங்கரவாதிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். அங்கிருந்த உள்ளூர் மக்கள் குதிரைகளுடன் வந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர்.
எல்லா இடங்களும் நமது சொந்த ஊர் போல் கருதியிருந்தேன். ஆனால், பஹல்காமில் எந்த பயமுமின்றி பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர். அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடி வருகின்றனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதுகாப்பான இந்தியா தான் நமக்கு தேவை. நாம் இந்தியர்கள். இனி இந்திய மக்கள் அச்சப்பட கூடாது. பயங்கரவாதிகள் தான் பயந்து நடுங்க வேண்டும். இவ்வாறு, பல்லவி கூறினார்.










மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு