ஐ.பி.எஸ்., ரூபாவுக்கு பதவி உயர்வு; அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு : பதவி உயர்வு தொடர்பாக ஐ.பி.எஸ்., ரூபா அளிக்கும் கடிதத்தை, இரண்டு மாதங்களுக்குள் பரிசீலிக்கும்படி, மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா பட்டு சந்தைப்படுத்துதல் வாரிய நிர்வாக இயக்குநர் ரூபா. ஐ.பி.எஸ்., அதிகாரி. இவர் மீது விவசாய துறையின் உணவுபடுத்துதல் பிரிவில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி தொடர்ந்த அவதுாறு வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த அவதுாறு வழக்கால், தனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லை. பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் ரூபா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்து வந்தார்.

நேற்று நடந்த விசாரணையில் ரோகிணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பனீந்திரா வாதிடுகையில், ''மனுதாரர் மீது தொடரப்பட்ட அவதுாறு வழக்கில், என் மனுதாரர் தான் புகார்தாரர். எனவே இந்த மனுவில் தலையிட எங்களுக்கும் உரிமை உள்ளது.

பதவி உயர்வு என்பது அரசின் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் வெளியிட வேண்டிய அறிவிப்பு. இதில் எங்கள் தலையீடு உள்ளது என்று கூறுவதை ஏற்க முடியாது,'' என்றார்.

ரூபா வக்கீல் பிபின் ஹெக்டே வாதிடுகையில், ''பிரதிவாதி ஒரு புகார் அளித்தார். அது விசாரிக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு மாநில அரசு பதவி உயர்வு வழங்கவில்லை. இரு அதிகாரிகளுக்கும் இடையிலான தகராறு என்பது தனிப்பட்ட விஷயம். இது சேவை விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பொருந்தாது. நகைக்கடை மோசடி வழக்கில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் நிம்பால்கருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

''அவர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும் அவருக்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக மாநில அரசு பதவி உயர்த்து அளித்துள்ளது. பிரதிவாதி தொடர்ந்த வழக்கால், என் மனுதாரரின் பதவி உயர்வு நிறுத்தப்பட கூடாது,'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், ''மனுதாரர் தாக்கல் செய்த மனு, அவருக்கும், நிர்வாக சீர்திருத்த ஆணையத்திற்கும் இடையிலான விஷயம். இதில் பிரதிவாதி தலையிடும் அவசியம் இல்லை. மனுதாரர் பதவி உயர்வு தொடர்பாக, மாநில அரசிடம் விண்ணப்ப மனு சமர்ப்பிக்க வேண்டும். அந்த மனுவை இரண்டு மாதங்களில், அரசு பரிசீலிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement