கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை; சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்

10

சென்னை: கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற புதிய மசோதாவை சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்தார்.



சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி, கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு துன்புறுத்துவதில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் சட்ட முன் வடிவு ஒன்றை தாக்கல் செய்தார்.


அதில் கூறப்பட்டு உள்ளதாவது;


பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கூலித் தொழிலாளிள், கட்டத் தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகி தாங்க முடியாத கடன் சுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.


இதுபோன்ற நேரங்களில் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் இது போன்றவர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை பின்பற்றுகிறார்கள். அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.


இதுபோன்ற எண்ணங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.


வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.


இந்த சட்டத்திருத்தத்தின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.


கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களைது சொத்துகளை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


இச்சட்ட முன்வடிவின்படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஜாமினில் வெளிவர முடியாது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement