இனி பொய் சொல்லி ஆட்சியை பிடிக்க முடியாது: விஜய்

37

கோவை: '' தமிழகத்தில் இனி பொய் சொல்லி ஆட்சியை பிடிக்க முடியாது,'' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.

பேரணி



கோவையில் த.வெ.க.,வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு இன்றும்(ஏப்.,26) நாளையும் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அக்கட்சி தலைவரும் நடிகருமான விஜய் கோவை வந்தார். விமான நிலையத்தில் திரண்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விடுதியில் ஓய்வெடுத்த விஜய், பிறகு தனியார் கல்லூரியில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடந்த இடத்திற்கு பேரணியாக சென்றார். அவரது காரை ஏராளமானோர் பின்தொடர்ந்து சென்றனர்.

பயிற்சி பட்டறை



அங்கு விஜய் பேசியதாவது: கோவை என்றாலே மக்களின் மரியாதைதான் முதலில் நினைவுக்கு வரும். பூத் ஏஜென்ட் கூட்டம் என்றால் ஓட்டு சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்கும். ஆனால், இது ஓட்டுக்காக மட்டும் நடக்கிற கூட்டம் கிடையாது.

ஆட்சிக்கு வந்து நாம் என்ன செய்ய போகிறோம். இதுவரை செய்ததை போன்று செய்யப் போவது கிடையாது. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது மக்களுக்காக தான். மக்களின் நலனுக்காக தான். மக்களிடம் இருந்து எப்படி ஓட்டு வாங்கப் போகிறோம் என்பதற்காக மட்டும் இந்த பயிற்சி பட்டறை கிடையாது.

நடக்க விட மாட்டேன்



மக்களோடு நாம் எப்படி தொடர்பில் இருக்க போகிறோம்? எப்படி ஒன்றிணைய போகிறோம்? என்பது பற்றி விவாதிக்க தான் பயிற்சி பட்டறை. இதற்கு முன்னர் நிறைய பேர் வந்து இருக்கலாம். போய் இருக்கலாம். பொய் சொல்லி இருக்கலாம். மக்களை ஏமாற்றி இருக்கலாம். இதெல்லாம் செய்து ஆட்சியை பிடித்து இருக்கலாம். அதற்கு நான் வரவில்லை. இனிமேல் அப்படி நடக்காது. நடக்கவிடப்போவது கிடையாது.


நம்ம கட்சி மேல் பெரிய நம்பிக்கை கொண்டு வரப் போவதே தேர்தல் களப்பணியில் இருக்கும் பூத் ஏஜென்ட் நீங்கள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரனுக்கு சமம். நாம் ஏன் வந்து இருக்கிறோம். எதற்கு வந்து இருக்கிறோம். எப்படிப்பட்ட ஆட்சி அமைக்க போகிறோம் என மக்களிடம் சொல்லுங்கள்.

களம்தயார்



உங்களுக்கு என்ன அனுபவம், அரசியல் அனுபவம் உள்ளது என மக்கள் நிச்சயம் கேட்பார்கள். நீங்கள் யார்? எப்படி பட்டவர்கள்? திறமை என்ன? என்பது எனக்கு தெரியும். நம்மிடம் என்ன இல்லை. மனதில் நேர்மை இருக்கிறது. கறை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. லட்சியம் உள்ளது. உழைக்க தெம்பு உள்ளது. பேச உண்மை இருக்கிறது. செயல்பட திறமை இருக்கிறது.அர்ப்பணிப்பு குணம் இருக்கிறது. களம் ரெடியாக உள்ளது. இதற்கு மேல் என்ன வேண்டும். போய் கலக்குங்கள். நம்பிக்கை உடன் இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.

Advertisement