சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம்: கேப்டன் தோனி விளக்கம்

2

சென்னை: ''சென்னை அணியில் ஒரு சில பிரச்னைகள் என்றால் சரி செய்யலாம். பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படாத நிலையில், தேறுவது கடினம்,'' என கேப்டன் தோனி தெரிவித்தார்.

பிரிமியர் அரங்கில் 5 முறை சாம்பியனான சென்னை அணிக்கு இம்முறை பேட்டிங், பவுலிங் என எதுவுமே சரியாக அமையவில்லை. ரச்சின், கான்வே, சாம் கர்ரன், பதிரனா போன்ற அன்னிய வீரர்கள் ஏமாற்றுகின்றனர். ஜடேஜா, ஷிவம் துபே, அஷ்வின், விஜய் சங்கர், திரிபாதி, தீபக் ஹூடா உள்ளிட்ட உள்ளூர் நட்சத்திரங்களும் தடுமாறுகின்றனர். இளம் வீரர்களான ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரவிஸ் நம்பிக்கை தந்த போதும், வெற்றிக்கு உதவவில்லை.


21 வீரர்கள் வாய்ப்பு: பொதுவாக சென்னை 'லெவன்' அணியில் அதிகளவில் மாற்றம் இருக்காது. இத்தொடரில் நிறைய வீரர்கள் தடுமாற, அடிக்கடி மாற்றங்கள் செய்யப்பட்டன. மொத்தம் உள்ள 27 பேரில், 9 போட்டிகளில் 21 வீரர்களை களமிறக்கியும் பலன் கிடைக்கவில்லை. சேப்பாக்கத்தில் நேற்று முன் தினம் நடந்த முக்கிய போட்டியில் கூட ஐதராபாத்திடம் தோற்றது. இதனால் சென்னை கேப்டன் 'கூல்' தோனியே கொஞ்சம் கோபப்பட்டார்.


வீழ்ச்சிக்கு காரணம்: போட்டிக்கு பின் தோனி அளித்த பேட்டி:பிரிமியர் தொடரில் ஒன்று அல்லது இரண்டு பிரச்னைகள் என்றால் சரி செய்ய முயற்சிக்கலாம். ஆனால், சென்னை அணியில் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படாத நிலையில், தேறுவது கடினமாக உள்ளது. ஒரே சமயத்தில் 4-5 பேர் 'பார்ம்' இல்லாமல் தடுமாறியதால், அணியில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல்வேறு கூட்டணிகளை களமிறக்கி பார்த்தோம்.

'மிடில் ஓவரில்' ஸ்பின்னர்களுக்கு எதிராக சென்னை பேட்டர்கள் அதிரடியாக ரன் சேர்க்காததே வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். இந்த சமயத்தில் பெரிய 'ஷாட்' அடிக்க தவறினர். தற்போதைய ஆட்ட முறைக்கு ஏற்ப, அதிவேகமாக ரன் குவிக்கவில்லை. அனைத்து போட்டிகளிலும் 180-200 ரன் அடிக்க வேண்டுமென கூறவில்லை. சூழ்நிலையை புரிந்து கொண்டு, ஸ்கோர் போர்டில் ரன்னை உயர்த்துவது அவசியம்.
ஐதராபாத்திற்கு எதிராக எங்களது விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. 154 ரன் என்பது போதுமான ஸ்கோர் இல்லை. 15-20 ரன் குறைவாக எடுத்தோம். பிரவிஸ் மட்டும் சிறப்பாக பேட் செய்தார். 'ஸ்பின்னர்'களை சாமர்த்தியமாக எதிர்கொண்டார்.
இவ்வாறு தோனி கூறினார்.

பிளமிங் ஒப்புதல்
பிரிமியர் தொடருக்கான வீரர்கள் 'மெகா' ஏலத்தில், சென்னை அணி கோட்டைவிட்டது.
இதை ஒப்புக் கொண்ட பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில்,''ஏலத்தின் போது மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டன. நாங்கள் சரியான வீரர்களை தேர்வு செய்ய தவறினோம். விரும்பிய அணி அமையவில்லை. 'ரெகுலர்' கேப்டன் ருதுராஜுக்கு ஏற்பட்ட காயம், சில வீரர்கள் 'பார்ம்' இல்லாமல் தவித்ததால், வியூகம் வகுப்பதில் சிரமப்பட்டோம். நிறைய மாற்றங்களை செய்தோம். வீழ்ச்சிக்கு யார் எல்லாம் காரணம் என்பதை ஆய்வு செய்வோம். இது என்னிடம் இருந்தே துவங்கும்,''என்றார்.

மாற்றம் நிச்சயம்
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரெய்னா கூறுகையில்,''ஏலத்தில் சென்னை அணி, சரியான வீரர்கள் தேர்வு செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். தான் விரும்பிய நான்கு அல்லது 5 வீரர்கள் பெயரை மட்டும் தோனி சொல்லியிருப்பார். மற்றபடி ஏல விஷயத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார். 43 வயதிலும் சென்னை அணிக்காக, ரசிகர்களுக்காக விளையாடுகிறார். கேப்டன், விக்கெட்கீப்பர் என அனைத்து பொறுப்புகளையும் தனிஒருவனாக சுமக்கிறார். ரூ. 12-18 கோடி வரை கொடுத்து வாங்கப்பட்ட மற்ற வீரர்கள், தோனிக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இதன் காரணமாக சேப்பாக்கம் கோட்டை தகர்ந்தது. இதுவரை தோற்காத அணிகளிடம் எல்லாம் தோற்க நேர்ந்தது. சென்னை அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடிய வீரர்கள் கூட ஏமாற்றுகின்றனர். அணியின் தவறுகள் தொடர்கின்றன. இவற்றை தோனி நிச்சயம் ஆய்வு செய்வார். அணியில் பெரியளவில் மாற்றங்களை செய்வார்,''என்றார்.

Advertisement