ரிலையன்ஸ் செயல் இயக்குநராக அனந்த் அம்பானி நியமனம்

மும்பை,:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக, அனந்த் அம்பானி நியமிக்கப்பட்டு உள்ளதாக, பங்குச்சந்தையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் மே 1 முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்த பொறுப்பை அனந்த் வகிப்பார் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் முதல் தொலைதொடர்பு வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன், அனந்த் அம்பானி.

கடந்த 2023 முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது அவரை முழு நேர இயக்குநராக நியமிக்க இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு பின்னர் இது நடைமுறைக்கு வருகிறது. இதன் வாயிலாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக பொறுப்பேற்கும் முகேஷ் அம்பானியின் முதல் வாரிசு ஆகிறார் அனந்த் அம்பானி.

Advertisement