யாரும் பொய் சொல்லி ஆட்சிக்கு வர முடியாது த.வெ.க., தலைவர் விஜய் ஆவேசம்

கோவை: ''இனி, யாரும் பொய் சொல்லி ஆட்சிக்கு வர முடியாது; அவ்வாறு நடக்க விடப்போவதில்லை,'' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசினார்.
த.வெ.க., கட்சியில் அமைத்துள்ள ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு, கோவையில் நேற்று நடந்தது. அதில், கட்சியின் தலைவரான விஜய் பேசியதாவது:
இங்கு நடப்பது பூத் லெவல் பயிற்சி பட்டறை. கட்சியினரை தேர்தலுக்கு தகுதிப்படுத்துவதற்காக நடத்தப்படும் நிகழ்வு. ஓட்டுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாக இதை பார்க்கக்கூடாது.
இனிமேல் நடக்காது
ஆட்சி அதிகாரம் என்றாலே ஓட்டு சம்பந்தப்பட்டது தான். இருந்தாலும், ஆட்சிக்கு வந்து, மற்றவர்கள் போல் நாம் இருக்கப் போவதில்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது மக்கள் நலனுக்காக மட்டுமே.
மக்களிடம் இருந்து எப்படி ஓட்டு வாங்கப் போகிறோம் என்பது ஒருபக்கம் இருந்தாலும், மக்களுடன் எப்படி 'கனெக்ட்'டாகி இருக்கப் போகிறோம் என்பது தான், இப்போதைக்கு நம் பிரதான ஆலோசனை.
இதற்கு முன் நிறைய பேர் நிறைய பொய் சொல்லியிருக்கலாம்; மக்களை ஏமாற்றி இருக்கலாம். இப்படியெல்லாம் சொல்லி ஆட்சியையும் பிடித்திருக்கலாம். இனிமேல் அப்படி நடக்காது; நடக்க விடமாட்டோம்.
நம் கட்சி மீது, மக்களிடம் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தப் போவதே, பூத் லெவல் ஏஜன்டான நீங்கள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரனுக்கு சமமானவர்கள்.
நீங்கள் மக்களிடம் செல்லும்போது, 'உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது' என, மக்கள் கேட்பர். கறை படியாத அரசியலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்; எங்களிடம் நேர்மை, லட்சியம் இருக்கிறது. உழைக்க தெம்பு இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். மக்கள் உங்களை கட்டாயம் நம்புவர்.
இவ்வாறு விஜய் பேசினார்.
வளாகத்தில் தீ
கோவையில் நேற்று துவங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கில், தொண்டர்கள் அத்துமீறலால், கருத்தரங்கம் நடந்த சரவணம் பட்டியில் உள்ள தனியார் கல்லுாரி வளாகம் களேபரமாக காட்சியளித்தது.
பிற்பகல் 3:00 மணியளவில், ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 4:30 மணியளவில் விஜய் வந்தார்.
பிரதான நுழைவு வாயிலில், விஜய் வரும் வரை, ரசிகர்கள் மற்றும் கட்சியினர் கூட்டம் இல்லாத நிலையில், விஜய் வந்தபோது, திடீரென கட்டுக்கடங்காத கூட்டம், நுழைவு வாயில் முன் திரண்டது.
பாதுகாப்பு பணியில் போதிய போலீசார் இல்லாத நிலையில், பவுன்சர்களாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், நுழைவு வாயில் 'கேட்' தள்ளப்பட்டு, கூட்டம் உள்ளே சென்றது.
கல்லுாரி வளாகம் களேபரமாக காட்சியளித்தது. கூட்டத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, மாற்று வழியில், கல்லுாரி அரங்கை அடைந்தார் விஜய்.
கூட்டத்தில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் அவதியடைந்தனர். நெரிசலால் காலணிகள் சிதறிக் கிடந்தன. கல்லுாரியில் இருந்த சிலர், இந்த காலணிகளை அப்புறப்படுத்தினர். கூட்டம் நடக்கும் இடத்துக்கு ரசிகர்கள் சென்று, வெளியில் வைக்கப்பட்டிருந்த 'ஏசி'க்களின் மீது முண்டியடித்து ஏறியதால் தீப்பிடித்தது.
தீயை அணைத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர். இப்படி, கட்டுக்கோப்பாக இல்லாத நிலையில், தொண்டர்கள், ரசிகர்கள் அத்துமீறியது, அதிருப்தியை ஏற்படுத்தியது.
தடுப்பு கிழித்து காயம்
முன்னதாக, கருத்தரங்கு ஏற்பாடுகளை பார்வையிட்ட த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்தை சூழ்ந்து கொண்டு, கட்சியினர் முண்டியடித்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஆனந்த், தடுப்பு ஒன்றில் சாய்ந்தார்.
அப்போது, அவருடைய காலில் தடுப்பு கிழித்து காயம் ஏற்பட்டது; மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
கொடி நடுவதில் போட்டிகோவை சிட்ராவிலிருந்து, 1 கி.மீ., தொலைவில் உள்ள விமான நிலையத்தின் நுழைவாயிலில், இன்று வரவிருக்கும் உதயநிதியை வரவேற்பதற்காக, கொடிக் கம்பங்களை இருபுறமும் தி.மு.க.,வினர் நட்டனர். த.வெ.க.,வினர் தங்கள் கட்சி கொடியை நடுவதற்கு இடைஞ்சலாக இருக்கவே, தி.மு.க.,வினர் கொடிக் கம்பங்களை நட்டிருப்பதை அறிந்ததும், தி.மு.க., கொடிக் கம்பங்களுக்கு நடுவே த.வெ.க., கொடிக் கம்பங்களை நட்டனர். இதனால், த.வெ.க., மற்றும் தி.மு.க.,வினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.


மேலும்
-
ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; மத்திய அரசு நடவடிக்கைக்கு காங்கிரஸ் முதல்வர்கள் ஆதரவும், எதிர்ப்பும்!
-
இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டும் நாடுகள்; பதற்றத்தில் உளறும் பாகிஸ்தான்
-
சீறிப்பாயும் காளைகள்; கோவையில் ஜல்லிக்கட்டு துவக்கம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
துணை முதல்வர் உதயநிதி பெயரை சொல்லி கோவையில் தி.மு.க.,வினர் வசூல் வேட்டை