முதல்வர் குறித்து அவதுாறு பரப்பியதாக பா.ஜ., பிரமுகர் கைது

மன்னார்குடி: தமிழக முதல்வர் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறாக கேலி சித்திரம் வெளியிட்ட பா.ஜ., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் லெனின், 35. இவர், பா.ஜ., இளைஞர் அணி பொதுச்செயலராக இருந்து வருகிறார். இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து, சமூக வலைதளங்களில் கேலி சித்திரம் வெளியிட்டுள்ளார்.

மன்னார்குடி போலீசார் வழக்கு பதிந்து, லெனினை தேடி வந்தனர். அவர், முத்துப்பேட்டை அருகே, தம்பிக்கோட்டையில் தங்கி இருப்பதை அறிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதை கண்டித்து, மன்னார்குடி பா.ஜ., கட்சியினர், மன்னார்குடி - ருக்மணிபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், மன்னார்குடி - திருவாரூர் சாலையிலும் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது.

Advertisement