நகர்ப்புற வாரிய குடியிருப்பு ஒப்படைப்பு விவகாரம் 250 போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பேச்சு

திருவொற்றியூர்:திருச்சினாங்குப்பம் பயனாளிகளிடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வீடுகள் ஒப்படைப்பது குறித்து, துணை கமிஷனர் மற்றும் வாரிய அதிகாரிகள் பேச்சு நடத்தி விளக்கமளித்தனர்.
திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தில் மீனவர்களின் குடிசை பகுதிகளை அகற்றி, 2015ம் ஆண்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவானது.
அதன்படி, 2019ல், 35.63 கோடி ரூபாய் செலவில், ஒரு திட்டப் பகுதியில் 120 என, மூன்று திட்டப்பகுதிகளாக, 360 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.
கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை, கடந்தாண்டு ஜூலை மாதம், முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில், 352 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, பயனாளி பங்கீட்டு தொகையாக 2.40 லட்சம் ரூபாயில், 50,000 ரூபாய் முன்பணமாக கட்ட வாரியம் கோரியது. அதன்படி, அனைவரும் கட்டியுள்ளனர்.
இருதரப்பு மோதல்
இந்நிலையில், மீதமுள்ள 1.90 லட்சம் ரூபாயை, வங்கி கடன், வட்டியில்லாமல் மாதந்தோறும் சுலப தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என, மீனவ மக்கள், மார்ச் 25ம் தேதி, தர்ணா போராட்டம் நடத்தினர்.
மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், வீட்டு வாடகை கூட செலுத்த முடியவில்லை. எனவே, வாரிய வீட்டை உடனே ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி, கடந்த 17ம் தேதி, எண்ணுார் விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன், ஒரு வார காலத்தில் அதிகாரிகளிடம் பேசி, தீர்வு காண்பதாக கூறினார்.
பின் ஒரு பகுதியினர் கலைந்தனர். மற்றொரு தரப்பினர் மறியலை கைவிட்டதை எதிர்த்துள்ளனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. துணை கமிஷனர் முன்னே, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால், பதற்றம் நிலவியது.
போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி, ஊர் கூட்டம் நடக்கவிருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலை அகற்றினர்.
ஊர் கூட்டத்தில் பீதி
இந்நிலையில், நேற்று காலை திருச்சினாங்குப்பம் மீனவ கிராமத்தில் ஊர் கூட்டம் நடந்தது. இதில், வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் நக்கீரன், உதவி பொறியாளர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்று, அவர்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, தமிழகம் முழுதும் ஒரே நடைமுறை தான் கடைப்பிடிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை மொத்தமாக கட்டினாலும் சரி. தவணை முறையில் கட்டுவதாக கூறினால், வங்கி கடன் மூலம் கட்ட அனுமதிக்கப்படுவர்.
அதன்படி, ஏழு ஆண்டுகளுக்கு மாதந்தோறும், 2,960 ரூபாய் வீதம் கட்ட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு தவணை தொகை என்றால், 2,300 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும்.
அதன்படி, 1.90 லட்ச ரூபாய்க்கு, கூடுதலாக 40,000 ரூபாய் வரை கட்ட வேண்டும். எனவே மக்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என, துணை கமிஷனர் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
ஒப்புகொள்ளும் பட்சத்தில், மே மாத இறுதிக்குள், வீடுகள் புனரமைக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என, அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக பாதுகாப்பிற்காக, 250க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மூன்று மாநகர பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன.
மேலும்
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!