பயங்கரவாதிகளுக்கு கடுமையான பதிலடி நிச்சயம்: ரத்தம் கொதிக்கிறது என பிரதமர் மோடி ஆவேசம்

புதுடில்லி: ''பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது'' என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
மன் கி பாத் நிகழச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பார்த்த ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தாக்குதல் சம்பவம், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களின் பதற்றத்தை காட்டுகிறது. அவர்களின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
கடுமையான பதிலடி
தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளும், அவர்களை வழிநடத்துபவர்களும், காஷ்மீரை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றனர். எனவேதான் இப்படி ஒரு சதித்திட்டத்தை தீட்டி செயல்படுத்தி உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நமது தேசத்தின் மகத்தான மன உறுதியை நாம் வெளிப்படுத்தியாக வேண்டும்.
ஒற்றுமையே பலம்
இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாம் என்ன செய்கிறோம் என்று உலகம் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. மொத்த நாடும் ஒரே குரலில் பேசிக் கொண்டிருப்பதை இந்த உலகம் பார்க்கிறது. அமைதி திரும்ப தொடங்கிய நேரத்தில், வளர்ச்சி பொறுக்காமல் காஷ்மீரை அழிக்க நினைக்கிறார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நமது ஒற்றுமையே பலம்.
யோசனைகள்
சமீபத்தில் காலமான விஞ்ஞானி டாக்டர் கஸ்தூரி ரங்கன், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப தொலைநோக்குப் பார்வை கொண்ட யோசனைகளை அவர் முன்வைத்தார். அவருக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரை இறங்கும் நிகழ்வுக்காக நான் பெங்களூரு இஸ்ரோ மையத்துக்கு சென்றிருந்தேன்.
விஞ்ஞானிகள் சாதனை
அப்போது எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. திட்டம் தோல்வியை தழுவியது. அது விஞ்ஞானிகளுக்கு மிகவும் சிரமமான காலம். ஆனால் விஞ்ஞானிகளின் பொறுமையையும், சாதிக்கத் துடிக்கும் அவர்களது ஆர்வத்தையும் நான் கண்டேன்.
அடுத்த சில ஆண்டுகளில், சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கச் செய்து அதே விஞ்ஞானிகள் சாதனை படைத்ததை மொத்த உலகமும் கண்டு அதிசயம் அடைந்தது.
இந்தியா மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்தை செயல்படுத்தியது. ஆதித்யா எல் ஒன் திட்டம் மூலம் சூரியனுக்கு மிக நெருக்கமாக நமது விண்கலம் சென்றது. இன்றைய உலகில் மிகவும் குறைந்த செலவில் மிகவும் வெற்றிகரமான விண்வெளித் திட்டம் என்பது இந்தியாவின் திட்டம் தான். உலகின் பல நாடுகள் விண்வெளித் திட்டங்களுக்கும் செயற்கை கோள்களுக்கும் இஸ்ரோவின் உதவியை நாடுகின்றன.
சாதிக்கணும்
விண்வெளித் திட்டம் தொடங்கிய காலத்தில், தற்போது இருப்பதைப் போன்ற நவீன வசதிகள் எதுவும் நமது விஞ்ஞானிகளுக்கு இல்லை; தொழில் நுட்பமும் அப்போது நம்மிடம் இல்லை. ஆனால் நாட்டுக்காக ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் இருந்தது. நமது விஞ்ஞானிகள், ராக்கெட் உபகரணங்களை மாட்டு வண்டியிலும், சைக்கிள்களிலும் கொண்டு சென்ற அந்த படங்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.
சமீபத்தில் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். அந்த நாட்டுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இந்திய ராணுவம் ஆபரேஷன் பிரம்மா என்ற திட்டத்தை செயல்படுத்தியது. விமானப்படை விமானங்கள் முதல் கடற்படை கப்பல்கள் வரை மியான்மர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு ஒரு நடமாடும் மருத்துவமனை உருவாக்கப்பட்டது. சேதமடைந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், கட்டமைப்புகளை சீர் செய்ய பொறியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திட்டங்கள்
போர்வைகள் கூடாரங்கள் மருந்து பொருட்கள் உணவுப் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு விண்வெளி நிறுவனம் மட்டுமே இந்தியாவில் செயல்பட்டு வந்தது. ஆனால் இன்று 325 விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. ககன்யான், ஸ்பேடக்ஸ், சந்திரயான் 4 ஆகிய முக்கிய திட்டங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், மார்ஸ் லேண்டர் மிஷன் ஆகிய திட்டங்களிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தமிழகத்திலும் லிச்சி பழம் சாகுபடி செய்யப்படுகிறது. பீஹார் போன்ற மாநிலங்களில் மட்டுமே சாகுபடியாகும் லிச்சி பழம் தமிழத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. 7 வருடங்களாக முயற்சித்து, கொடைக்கானல் விவசாயி ஒருவர் சாகுபடி செய்திருக்கிறார் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.










மேலும்
-
பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு; மனோ தங்கராஜுக்கு மீண்டும் பதவி
-
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: பிரதிகா அரைசதம் விளாசல்
-
சுதிர்மன் பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
-
ஹாக்கி: இந்தியா மீண்டும் தோல்வி
-
ஜூனியர் குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்
-
கோப்பை வென்றது பார்சிலோனா: 'கோபா டெல் ரே' கால்பந்தில்