டெல்டாவில் துார்வாரும் பணி கண்காணிப்பு குழுவில் விவசாயிகள் இடம் பெற கோரிக்கை

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில், ஆறு, கால்வாய் துார்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண்மை துறை அலுவலர், வி.ஏ.ஓ., நீர்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், விவசாயிகள் என சிலர், நீர்வளத்துறை அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு, துார்வாரும் பணிகளை செய்து வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:

டெல்டா மாவட்டங்களில் துார்வாரும் பணிகள் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக தனி நபரிடம் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் முறையாக பாசன வாய்க்கால்களை துார்வாருவது கிடையாது.

நீர்வளத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வாய்க்கால்கள், ஆறுகளை அளவீடு செய்து கொடுப்பது கிடையாது.

துார்வாரும் பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் யாரிடமும் துார்வாரும் பணிகள் குறித்து தெரியப்படுத்தாமல், நீர்வளத் துறை அதிகாரிகள் விவசாயி என ஒருவரை வைத்துக்கொண்டு பணிகளை செய்வதால், விளைநிலங்களுக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை.

பாசனதாரர்கள் சபை என ஒரு அமைப்பு இருந்தது. அந்த அமைப்பு தான் துார்வாரும் பணியை செய்தது. அரசியல்வாதிகளுக்கு அதில் பெரும் லாபம் இல்லை என்பதால், துார்வாரும் பணியை அரசு பணியாக மாற்றி, துார்வாரும் பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது துார்வாரும் பணிகளை கண்காணிக்க முறையாக பாசன பயன்பெறும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளை நியமித்து ஒரு குழுவை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துார்வாரப்படும் துாரம் எவ்வளவு?

ஆறுகள் 37

நீளம் 1,970.23 கி.மீ.,

கிளை கால்வாய்கள் 21,629

கால்வாய்கள் நீளம் 24,624.04 கி.மீ.,

'ஷட்டர்' சீரமைப்பு அவசியம்

காவிரியின் கடைமடையான நாகை மாவட்டத்தில், முக்கியமான பாசன, வடிகால் வாய்க்கால்கள் துார்வாரப்படுவதில்லை. பெரும்பாலான பகுதிகளில் ஷட்டர்கள் பழுதடைந்து, தடுப்பு பலகை இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த சீரமைப்பு பணிகள் நடைபெறாததால், துார்வாரும் பணிகளால் விவசாயிகளுக்கு பலனில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையான கணக்கெடுப்பு நடத்தி, பணிகளை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement