பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆசிரியை தர்ணா

வேலுார்: பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அரசு பள்ளி ஆசிரியை, காட்பாடி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் தர்ணாவில் ஈடுபட முயன்றார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மாதண்டகுப்பத்தை சேர்ந்தவர் தேசம்மாள், 48. இவர், கோடவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ள கிரேசா என்பவரின் கணவர் ஜான் சம்பத்குமார், பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, ஆசிரியை தேசம்மாளை ஆபாசமாக சித்தரித்து பேசியும், அவர் வீட்டிற்கு சென்ற போது பின் தொடர்ந்து சென்றும், பாலியல் தொல்லை அளித்து வந்தார்.

இதுகுறித்து, காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பொன்னை போலீஸ் ஸ்டேஷனில், ஆசிரியை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆத்திரமடைந்த அவர், பொன்னை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மீண்டும் புகார் மனு அளித்து, தர்ணாவில் ஈடுபட முயன்றார்.

உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என, ‍அவரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

Advertisement