மனைவியின் கள்ளக்காதலரை கண்டித்த கணவர் கொலை

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்தவரை கண்டித்த கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சுரண்டை அருகே ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தாமஸ் 26. கட்டட தொழிலாளி. சாத்தான்குளத்தைச் சேர்ந்த நந்தினியை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு வயதில் மகன் உள்ளார். தாமஸ் மனைவி நந்தினி, குழந்தையுடன் கடையம் அருகே நாலாங்கட்டளை என்ற ஊரில் தங்கி இருந்து கட்டட வேலைகளை செய்து வந்தார். முக்கூடல் சிங்கம் பாறையைச் சேர்ந்த அந்தோணி ஜெனித் 36, என்பவரிடம் கட்டட வேலைகள் செய்தார்.

அப்போது அடிக்கடி வீட்டுக்கு வந்த அந்தோணி, தாமஸ் மனைவி நந்தினியுடன் கள்ள தொடர்பு கொண்டிருந்தார். இதை தாமஸ் கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

நேற்று காலை தாமஸ் நாலாங்கட்டளை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்து தகராறு செய்த அந்தோணி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார்.

இதில் தாமஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். கடையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement