சாலையோர வியாபாரிகளுக்கான 'ஸ்மார்ட்' கடைகள்...துருப்பிடித்து வீண்: பயனாளிகளுக்கு விரைந்து வழங்க எதிர்பார்ப்பு

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட,'ஸ்மார்ட்' கடைகள் எனும் பெட்டிக்கடைகள், பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் வீணாகி வருகின்றன. இதனால், இந்த கடைகளுக்கு விரைந்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டுமென, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், நகராட்சிப் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இதில், சாலையோர வியாபாரிகளுக்கு 5 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட, 'ஸ்மார்ட்' கடைகள் எனும் பெட்டிக்கடைகள் வழங்கப்படுகின்றன.

இந்த வியாபாரிகள், அனுமதிக்கப்பட்ட சாலையோரங்களில், இந்த 'ஸ்மார்ட்' கடைகள் வாயிலாக வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, கூடுவாஞ்சேரி நகராட்சியில், இரு ஆண்டுகளுக்கு முன், 12 நபர்களுக்கு இந்த 'ஸ்மார்ட்' கடைகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இந்த கடைகள் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படாமல், கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக வளாகத்தில் முடங்கிக் கிடக்கின்றன.

திறந்தவெளியில் இந்த 'ஸ்மார்ட்' கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு, பொலிவிழந்து உள்ளன. மேலும், கடைகள் துருப்பிடித்து, உறுதித் தன்மை குறைந்து வருகின்றன.

இதனால், இந்த 12 கடைகளையும் உரிய பயனாளிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து, கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் கூறியதாவது:

கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின், அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை வைத்து விழா நடத்தி, பயனாளிகளுக்கு கடைகளை வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், அது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, பயனாளிகளுக்கு இந்த கடைகளை ஒப்படைக்காமல், கடைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல, மறைமலைநகர் நகராட்சியில் அண்ணா சாலை, அடிகளார் சாலை, எம்.ஜி.ஆர்., சாலை, பாவேநதர் சாலை உள்ளிட்ட பஜார் வீதிகளில், நாளுக்கு நாள் நடைபாதை கடைகள் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில், பாவேந்தர் சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே, நகர பகுதியில் உள்ள நடைபாதை கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகளுக்கு,'ஸ்மார்ட்' கடைகள் எனும் பெட்டிக்கடைகள் வழங்க, நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

இதையடுத்து, மறைமலைநகர் நகராட்சிக்கு 20 'ஸ்மார்ட்' கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த கடைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நகராட்சி அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

எனவே, இந்த கடைகளை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

விரைவில் வழங்கப்படும்

மறைமலைநகர் நகராட்சியில், நடைபாதை வியாபாரிகள், 20 பேருக்கு முதற்கட்டமாக, இந்த ஸ்மார்ட் கடைகள் வழங்கப்பட உள்ளன. சிற்றுண்டி உணவகம், உணவகங்கள் நடத்துவோருக்கு, இந்த கடைகள் பயனுள்ளதாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு, விரைவில் கடைகள் வழங்கப்பட உள்ளன.

- மறைமலைநகர் நகராட்சி அதிகாரி



20 பேருக்கு கொடுத்தாச்சு




மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது.இங்கு ஜி.எஸ்.டி., சாலை, பஜார் வீதி, ஹாஸ்பிடல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்டோர் பழங்கள், காய்கறிகள் மற்றும் சிறிய அளவிலான டிபன் கடைகள் நடத்தி வருகின்றனர்.கடந்த 2022ல், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், மதுராந்தகம் நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு, இலவசமாக இந்த ஸ்மார்ட் கடைகள் வழங்க திட்டமிடப்பட்டது.இதற்காக, 'ரெடிமேடாக' நவீன கடைகள் தயாரிக்கப்பட்டன.மதுராந்தகம் நகராட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கடைகள், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 20 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

Advertisement