முதல்வர் வருகையின்போது உடைத்த மீடியனை மீண்டும் அமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில், 18ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பயனாளிகள் வந்திருந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், தச்சூர் - பொன்னேரி மாநில நெடுஞ்சாலையில் விழா நடைபெற்ற பகுதிக்கு வாகனங்கள் எளிதாக சென்று வருவதற்கு அங்கிருந்த 50 மீட்டர் தொலைவிலான கான்கிரீட் மீடியன் இடித்து அகற்றப்பட்டன.

விழா முடிந்து, 10 நாட்கள் ஆன நிலையில், அப்பகுதியில் மீண்டும் மீடியன் அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் எதிர் எதிரே பயணிக்கும் வாகனங்கள், மீடியன் இல்லாத பகுதியை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றன. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

விபத்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், இடித்து அகற்றப்பட்ட மீடியனை மீண்டும் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement