எச்சரிக்கை பலகை வைத்தும் பயனில்லை கழிவுகள் குவித்து எரிப்பது தடுக்கப்படுமா?

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையோரம், கீழ்முதலம்பேடு ஏரிக்கரை அருகே, தினசரி டன் கணக்கில் கழிவுகள் குவித்து எரிக்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், அருகில் உள்ள கீழ்முதலம்பேடு ஏரி நீரும் மாசு அடைந்து வருகிறது.

அந்த இடத்தில் கீழ்முதலம்பேடு ஊராட்சி நிர்வாகம், கழிவுகளை குவித்து எரிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை ஊராட்சி நிர்வாகம் மறுத்தது. இரு மாதங்களுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அந்த இடத்தை சுத்தம் செய்து, எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.

அதில், 'இந்த இடத்தில் குப்பைகளை கொட்டினாலோ அல்லது கழிவுநீரை ஊற்றினாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எச்சரிக்கை பலகையை மதிக்காத சில தனியார் நிறுவனங்கள், இரவு நேரத்தில் கழிவுகள் குவித்து எரித்து வருவதாக கூறப்படுகிறது.

கீழ்முதலம்பேடு ஊராட்சி நிர்வாகமும், கவரைப்பேட்டை போலீசாரும் இணைந்து, இரவு நேரத்தில் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு கழிவுகள் குவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement