மணல் லாரி மோதி வாலிபர் பலி

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலம், தாமரைக்குப்பம், மதனஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை இங்குள்ள மணல் லாரிகள் ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன .நேற்று தாமரைக்குப்பம் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி, அதிகாலை, 5:30 மணிக்கு லட்சிவாக்கம் கிராமத்தில் சென்று கொண்டு இருந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கட்டடத்தில் மோதியது.

அப்போது அந்த கட்டடத்தின் அருகே பைக்கில் நின்று கொண்டு இருந்த, சூளைமேனி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், 30 சிக்கிக் கொண்டார். லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். லாரி மோதிய சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

ஊத்துக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement