அரசாணையில் கல்வித்தகுதியை மாற்றி சம்பளத்தை கோட்டை விட்ட தமிழக அரசு

மதுரை: இந்திய மருத்துவத்தில் 'நர்சிங் தெரபிஸ்ட்' வேலைக்கான கல்வித்தகுதியை எட்டாம்வகுப்பு என்பதில் இருந்து மாற்றி பிளஸ் 2, டிப்ளமோ இன் நர்சிங் தெரபியாக (டி.என்.டி.,) மாற்றி அரசாணை வெளியிட்ட நிலையில் சம்பள விகிதத்தை மட்டும் எட்டாம் வகுப்பு கல்வித்தகுதிக்குரியதாக தமிழக அரசு தொடர்வதால் பாதி சம்பளத்தில் பணியாற்றுகின்றனர் 'நர்சிங் தெரபிஸ்ட்கள்'.

2016 க்கு முன் வரை 'நர்சிங் தெரபிஸ்ட்' படிப்புக்கு எட்டாம் வகுப்பு கல்வித்தகுதியே போதுமானதாக இருந்தது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு லெவல் 4 வகை அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பின் பிளஸ் 2 முடித்து டிப்ளமோ படித்தவர்கள் தான் இந்த பணிக்கு தகுதியானவர்கள் என 2017 ல் அரசாணை மாற்றப்பட்டது.

டிப்ளமோ முடித்தவர்கள் எம்.ஆர்.பி. எனப்படும் மருத்துவ கல்வி வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசாணையில் கல்வித்தகுதியை மாற்றியவர்கள் சம்பள விகிதத்தை மாற்றாததால் எட்டாண்டுகளாக லெவல் 4 தகுதிக்கான சம்பளமே பெறுகிறோம் என்கின்றனர் நர்சிங் தெரபிஸ்ட்கள்.

அவர்கள் கூறியதாவது:

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரேடியோகிராபர், லேப் டெக்னீசியன், டெண்டல் மெக்கானிக், டெண்டல் ஹைஜீனிஸ்ட், ஹெல்த் இன்ஸ்பெக்டர் (கிரேடு 2), அலோபதி, இந்தியன் மெடிசன் பார்மசிஸ்ட் போன்ற 7 டிப்ளமோ படிப்புகளை தமிழக அரசு நடத்துகிறது. இவர்கள் அரசுப் பணியில் சேரும் போது லெவல் 11 தகுதியின் அடிப்படையில் அடிப்படை சம்பளத்தை (ரூ.35,400) அரசு வழங்குகிறது. நாங்களும் பிளஸ் 2, டிப்ளமோ முடித்து வேலையில் சேர்ந்துள்ளோம். எங்களுக்கு லெவல் 4 தகுதிக்கான அடிப்படை சம்பளம் (ரூ.18ஆயிரம்) வழங்கி அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. தமிழகத்தில் உள்ள 220 பேரும் எட்டாண்டுகளாக பாதிச் சம்பளமே வாங்குகிறோம்.

இந்திய மருத்துவத் துறையில் வேலைக்கு சேர்வதற்காகவே நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. இப்படிப்பு முடித்தவர்கள் தமிழக அரசின் அரசு மருத்துவமனைகளில் உள்ள இயற்கை மற்றும் யோகா வார்டில் (ஆயுஷ் துறை) கீழ் சிகிச்சை உதவியாளர்களாக பணிபுரிகிறோம். அரசு மருத்துவமனைகளில் 97அலோபதி நர்ஸ்கள் ஆயுஷ் துறை பணியில் உள்ளனர். இவர்களை மீண்டும் அலோபதி துறைக்கு மாற்றி அந்த பணியிடங்களில் நர்சிங் தெரபிஸ்ட் முடித்தவர்களை நியமிக்க வேண்டும். இதுவரை டிப்ளமோ முடித்த 800 பேர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என்றனர்.

Advertisement