லாஸ்பேட்டையில் கேலி கூத்தான மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு

மண்ணில் விழும் ஒவ்வொரு மழை துளியும் உயிர் துளி நீர். இதனை சிந்தாமல் சிதறாமல் நிலத்தடியில் கொண்டு சேர்த்து மீண்டும் அறுவடை செய்ய வேண்டியது முக்கியம்.இதற்காகவே மழை நீர் கட்டமைப்பு திட்டத்தை புதுச்சேரி பெரும் முயற்சி எடுத்து நான்கு பிராந்தியங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

பொதுமக்களுக்கும் வழிகாட்டும் விதத்தில் முன் மாதிரியாக பல்வேறு அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், அரசு கட்டடங்களில் உள்ள இந்த மழை நீர் சேகரிப்பு திட்டம் பெயரளவில் ஒப்புக்கு உள்ளது வேதனையான விஷயம். இவை செயல்படுகின்றாதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.

இதனால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் பல இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு காட்சி பொருளாகி ஒன்றுக்கும் உதவாமல் உள்ளது.உதாரணத்திற்கு லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி அடுத்த ஆசிரியர் பயிற்சி மையம் எதிரே பொதுப்பணித் துறை மூலம் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டத்தை எடுத்து கொள்ளலாம்.

இங்கு மழை நீர் திட்டம் முறையான பராமரிப்பு இன்றி பல ஆண்டுகளாக கிடந்தது. பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்து மழைநீர் சேகரிப்பு இடம் ஒரு வழியாக சீர்செய்யப்பட்டது.

ஆனால் இந்த மழை நீர் திட்டத்தை முழுமையாக கேள்வி குறியாக்கும் விதத்தில் சீரமைத்து அனைத்தையும் கேலிகூத்தாகிவிட்டனர்.

இங்கு மேடான பகுதியில் பெருக்கெடுக்கும் மழை நீர் இயல்பாகவே தாழ்வான பகுதியில் தேங்கி ரீசார்ஜ் ஆகும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.ஆனால், மழைநீர் திட்டத்தை சீரமைக்கும்போது மழை வெள்ளம் வரும் நீர் வழிகளை பாதைகளை முழுமையாக சிமென்ட் கலவை கொண்டும் செங்கல் வைத்தும் மூடி, மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு சமாதி கட்டிவிட்டனர். இதனால் ஒருசொட்டு மழை நீர் ரீசார்ஜ் ஆக வருவதில்லை.

செங்கற்கள், சிமென்ட் கலவை போட்டு மழை நீர் பாதை மூடிவிட்டால் மழைநீர் எப்படி அந்த இடத்திற்கு வந்து ரீசார்ஜ் ஆகும். இது தான் பொதுப்பணித் துறையின் மழை நீர் சேகரிப்பு மாடலா என பொதுமக்கள் கேலி செய்கின்றனர்.

பொதுப்பணித் துறை தனது தவறை உடனடியாக திருத்திக்கொண்டு மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு மறுஉயிர் கொடுக்க வேண்டும். நீர் வழிகளை திறந்துவிட்டு, உயிர் நீரை நிலத்தடியில் சேகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் மழை நீர் திட்டங்களில் இதுபோன்று நீர் வழி பாதைகளை அடைக்காமல் இருக்க தொலை நோக்கு பார்வையும் செலுத்த வேண்டும்.

Advertisement