5 ஆண்டுகளுக்கு பின் துவங்குகிறது கைலாஷ் - மானசரோவர் யாத்திரை

1

புதுடில்லி: கொரோனா தொற்று மற்றும் இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை காரணமாக, 2019க்குப் பின் ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரை, வரும் ஜூனில் துவங்க உள்ளது.

மோதல்



கைலாஸ் - மானசரோவர் யாத்திரை ஹிந்து மற்றும் புத்த மதங்களை பின்பற்றுவோருக்கு மிகவும் புனிதமான பயணம். இந்த யாத்திரை இந்தியா, நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதி வழியாக செல்கிறது.

ஆண்டுதோறும் இந்த யாத்திரையை வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைக்கிறது. கடைசியாக, 2019-ல் கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நடந்தது.

அதன்பின், கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதல் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது. மானசரோவர் ஏரி, சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் உள்ளது. தற்போது இந்தியா - சீனா இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வரும் ஜூன் - ஆகஸ்ட் வரை 750 பேரை, 15 பிரிவுகளாக மானசரோவர் அழைத்துச்செல்ல வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

முன்பதிவு



அதில் ஐந்து பிரிவுகளாக 250 பேர், உத்தரகண்ட் மாநிலம் வழியாக லிபுலேக் கணவாயை கடந்து மானசரோவரை அடைவர். 10 பிரிவுகளாக 500 பேர், சிக்கிம் மாநிலம் வழியாக நாது லா கணவாயை கடந்து மானசரோவர் யாத்திரையை நிறைவு செய்வர்.

இதற்கான முன்பதிவை kmy.gov.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளும்படி வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

அதில், கணினி வாயிலாக பக்தர்கள் தேர்வு செய்யப்படுவர். மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள பாஸ்போர்ட் கட்டாயம்.

Advertisement