தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவியது.

அதிகபட்சமாக, சாத்தான்குளம், திற்பரப்பு, உத்தமபாளையம் பகுதிகளில் தலா 3 செ.மீ., மழையும், பேச்சிப்பாறை, மணியாச்சியில் தலா 2 செ.மீ., மழையும் பெய்துள்ளது.

தென்மாநில பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதனால், சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

நாளை முதல் மே 2ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 37 முதல் 38 டிகிரி செல்ஷியசை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement