தொழிலாளியை தாக்கி மொபைல் பறித்த மூன்று பேர் கைது

நெல்லிக்குப்பம் : தொழிலாளியை தாக்கி மொபைல் போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த வழிசோதனைபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்,48; செங்கல் சூளை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றின் அருகில் உள்ள சூளையில் வேலை செய்தபிறகு, கடைக்கு சைக்கிளில் சென்றார். அங்குள்ள கோவில் அருகே மது போதையில் இருந்த 4 பேர் ராஜேந்திரனை வழிமறித்து தாக்கி மொபைல் போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

நேற்று மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராஜேந்திரனின் மொபைல் போன் சிக்னல் இருப்பதை அறிந்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பினார். 3 பேர் பிடிபட்டனர்.

விசாரணையில், பி.என்.பாளையம் துலுக்கானம் மகன் குருமூர்த்தி,27; முருகன் மகன் அபினேஷ்,21; செல்வராஜ் மகன் மணிமாறன்,19; என்பதும், மொபைல் போனை பறித்ததும் தெரிந்தது. மூவரையும் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ராஜாராம் மகன் லோகேஷை தேடி வருகின்றனர்.

Advertisement