சமூக விரோதிகளின் கூடாரமான அனகாபுத்துார் சமுதாய நலக்கூடம்

அனகாபுத்துார்:தாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலம், அனகாபுத்துாரில், வார்டு அலுவலகத்தின் பின்புறம் சமுதாய நலக்கூடம் உள்ளது.
அனகாபுத்துார் நகராட்சியாக இருந்த போது, ஏழை மக்களின் வசதிக்காக, 2015 - 2016ம் ஆண்டு, பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 50 லட்சம் ரூபாய் செலவில், இந்த சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
ஏழை மக்கள் சிரமம்
அனகாபுத்துார் நகரில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பரவலாக வசிப்பதால், இந்த சமுதாய நலக்கூடம் பயன்பட்டது.
நிச்சயதார்த்தம், சீமந்தம், பிறந்த நாள், பணி நிறைவு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சில நேரங்களில், திருமண வரவேற்பு கூட நடத்தப்பட்டது.
பின், அதன் பராமரிப்பு மோசமானதால், மக்கள் பயன்படுத்துவது குறைந்தது. பின், மீண்டும் நிதி ஒதுக்கி சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அனகாபுத்துார் நகரம், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதில் இருந்து, இந்த சமுதாய நலக்கூடம் பராமரிப்பின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
மாட்டு தொழுவமாகவும், கஞ்சா, மது போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாகவும் மாறிவிட்டது. உட்புறம்குப்பை, கழிவுகள் கொட்டுவதும் அதிகரித்து விட்டது.
அனகாபுத்துாரில் வேறு சமுதாய நலக்கூடம் இல்லாததால், குடும்ப நிகழ்வுகளை நடத்த, ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர்.
வலியுறுத்தல்
தனியார் திருமண மண்டபங்களுக்கு சென்றால், லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால், வசதி இல்லாதவர்கள், வீடுகளிலேயே நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்கின்றனர்.
அதனால், சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை. அதனால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி
-
வீரன் பாப்பாத்தி அம்மன் திருவிழா
-
தொ.மு.ச., கவுன்சில் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
-
குளவி கொட்டி சிறுவன் சாவு
-
தவறி விழுந்த தொழிலாளி சாவு