கிணற்றில் கவிழ்ந்த வேன்; ம.பி.,யில் 11 பேர் பலி

போபால் : மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள உன்ஹேலி பகுதியைச் சேர்ந்த 13 பேர், நீமுச் மாவட்டத்தின் மனாசா பகுதியில் உள்ள அந்திரி மாதா கோவிலுக்கு, 'மாருதி சுசூகி ஈகோ' வேனில் நேற்று சென்றனர்.

புதா -- தக்ராவாத் சாலையில் வேன் சென்ற போது, பைக் ஒன்று குறுக்கே வந்தது. வேகமாக சென்ற வேன், பைக் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்தது. இதில் பைக்கில் இருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் தாறுமாறாக சென்ற வேன், சாலை ஓரம் இருந்த 40 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்தது.

வேனில் இருந்த 13 பேரில் ஒன்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற வந்த அப்பகுதியைச் சேர்ந்த மனோகர் சிங் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த மீட்புப் படையினர் நான்கு பேரை பத்திரமாக மீட்டனர். உயிரிழந்த 10 பேரின் உடல்களை கைப்பற்றினர்.

Advertisement