கோப்பை வென்றது பார்சிலோனா: 'கோபா டெல் ரே' கால்பந்தில்

செவில்லே: 'கோபா டெல் ரே' கால்பந்தில் பார்சிலோனா அணி கோப்பை வென்றது. பைனலில் 3-2 என ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.

ஸ்பெயினில், 'கோபா டெல் ரே' கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. செவில்லே நகரில் நடந்த பைனலில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28 வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் பெட்ரி முதல் கோல் அடித்தார்.


ரியல் மாட்ரிட் அணிக்கு எம்பாப்வே (70வது நிமிடம்), டிசவ்மேனி (77வது) தலா ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றுத்தந்தனர். இதற்கு, 84வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் டோரஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது.
பின் இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் பார்சிலோனாவின் ஜூல்ஸ் ஆலிவர் கவுன்டே ஒரு கோல் அடித்தார். முடிவில் பார்சிலோனா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 32வது முறையாக 'கோபா டெல் ரே' கோப்பை வென்றது.

Advertisement