அனுமதியின்றி மண் அள்ளுவதாக மக்கள் புகார்

அன்னுார் : ஆலாங்குட்டையில் நள்ளிரவு வரை சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.
அன்னுார் தாலுகாவில், குப்பனுார் ஊராட்சியில் பல இடங்களில் சட்ட விரோதமாக மண் அள்ளி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஊருக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் மதியம் துவங்கி நள்ளிரவு வரை மண் எடுக்கப்படுகிறது. எந்த விதிமுறையையும் பின்பற்றுவதில்லை.
தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மூன்று அடிக்கு கீழே மண் எடுக்கும் போது, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் முன்னிலையில் மண் எடுக்க வேண்டும். பகலில் மட்டுமே எடுக்க வேண்டும். இதற்குரிய பர்மிட் பெற வேண்டும், என பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
ஆனால் இவற்றை காற்றில் பறக்க விட்டு விட்டு மண் எடுத்து விற்பனை செய்கின்றனர். பத்து முதல் 20 அடி ஆழம் வரை மண் எடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் பொன்னான் என்பவரது பிளஸ் டூ படித்து வந்த மகன் மண் எடுப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கிய நீரில் இறங்கி உயிரிழந்தார். அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும்.
அதிக அளவு மண் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் கடத்தலை தடுக்க வேண்டும்,' என்றனர்.