போதை ஆசாமி வீசிய சிகரெட்; பள்ளி வகுப்பறை எரிந்து நாசம்

பட்டீஸ்வரம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கொற்கை அரசு உயர்நிலைப்பள்ளி வகுப்பறைக்குள் இருந்து நேற்று காலை புகை வெளியேறியது. அப்பகுதியினர், கும்பகோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வகுப்பறைக்குள் இருந்த கல்வி உபகரணங்கள், மேஜைகள், மாணவியருக்கு வழங்குவதற்கான நாப்கின், மின் ஒயர்கள் எரிந்து சேதமடைந்தன.

பள்ளி கட்டடத்தில் மது பிரியர்கள் விடுமுறை நாளில் மது அருந்துவது வாடிக்கை. மது பாட்டில்களையும் வகுப்பறைகளில் வீசி செல்வர். தற்போது கோடை விடுமுறை என்பதால் மதுபிரியர்கள் பள்ளியை, 'பார்' போல பயன்படுத்த துவங்கி விட்டனர்.

இந்த வகையில், போதை ஆசாமி யாரோ ஒருவர் சிகரெட் புகைத்துவிட்டு, வகுப்பறை ஜன்னல் வழியாக வீசியதில், வகுப்பறையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அவர் யார் என, பட்டீஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement