வர்த்தக துளிகள்

கடந்த 2025ம் நிதியாண்டில், ரிலையன்சின் நிகர மதிப்பு 118 பில்லியன் டாலராக உயர்ந்ததால், உலகின் முதல் 25 மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுவான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தற்போது உலகளவில் நிகர மதிப்பில் மிகவும் மதிப்புமிக்க 25 நிறுவனங்களுக்கான வரிசையில் 21ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதன் நிகர மதிப்பு 118 பில்லியன் டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 10.14 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களின் சந்தை மூலதனத்தை விஞ்சி தன் நிலையை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக, மைக்ரோசாப்ட், அல்பபெட் மற்றும் சவுதி அராம்கோ போன்ற உலகளாவிய ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்துள்ளது.
அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய அரசு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இரும்பு தாது, நிலக்கரி மற்றும் பிற முக்கிய மூலப்பொருட்கள் அடங்கிய சொத்துக்களை வாங்குவதை ஊக்குவித்து வருவதாக உருக்கு துறை செயலர் சந்தீப் பவுண்ட்ரிக் தெரிவித்துள்ளார்.உலகின் இரண்டாவது பெரிய கச்சா உருக்கு உற்பத்தியாளரான இந்தியா, 2030ம் ஆண்டுக்குள் அதன் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தி திறனை, தற்போதுள்ள 200 மில்லியன் டன்னை, 300 மில்லியன் டன்னாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக கூறிய அவர், உற்பத்தியை அதிகரிக்க, கோக் நிலக்கரி இறக்குமதி தற்போதுள்ள 58 மில்லியன் டன்னில் இருந்து, வருகிற 2030ம் ஆண்டுக்குள் 160 மில்லியன் டன்னாக உயரும் என்றார். இந்தியா கோக்கிங் நிலக்கரி தேவைகளில் 85 சதவீதத்தை பூர்த்தி செய்ய இறக்குமதியையே நம்பியுள்ளது. எனவே, சுரங்கங்களை நிறுவனங்கள் வாங்க அரசு ஊக்குவிப்பதாகவும் சந்தீப் தெரிவித்தார்.
மத்திய அரசின் மின்னணு உதிரி பாக தயாரிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நிறுவனங்கள், வடிவமைப்பு குழுவை அமைக்க வேண்டும் என மத்திய மின்னணுவியல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். டில்லியில் இத்திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான போர்ட்டலை வெளியிட்டு பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வடிவமைப்பு குழு அமைப்பது கட்டாயம் கிடையாது என்றாலும், இந்த நடைமுறையை பின்பற்றாத நிறுவனங்கள் தேர்வு செய்யப்படாது என அவர் கூறினார். எனவே, அனைத்து நிறுவனங்களும் வடிவமைப்பு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர், தரமான பொருட்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
புதிதாக நிறுவப்பட்ட ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கான விரிவான 'ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாய செயல்முறை விதிகள் 2025'ஐ அரசு அறிவித்துள்ளது. இந்த விதிகளின்படி, மேல்முறையீட்டு மனுக்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வது கட்டாயமாகிறது. ஆவணங்களை கண்டறிதல், ஆய்வு செய்தல் மற்றும் தயாரித்தலுக்கான நடைமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, விதிகள், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளையும் கோடிட்டு காட்டுகின்றன. ஜி.எஸ்.டி.ஏ.டி.,யின் செயல்பாடுகள், தீர்ப்புகளின் நிலைத்தன்மையை கொண்டு வரும் என்றும், உயர் நீதிமன்றங்களின் சுமையை குறைக்கும் என்றும், வெளிப்படையான, சீரான மற்றும் காலக்கெடுவிற்கு உட்பட்ட சர்ச்சைகள் தீர்க்கப்படுவதை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
பயணியின் ஐபேட் வெடிக்கும் அபாயம்; லுப்தான்சா விமானம் அவசரமாக தரை இறக்கம்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு