பயணியின் ஐபேட் வெடிக்கும் அபாயம்; லுப்தான்சா விமானம் அவசரமாக தரை இறக்கம்

2

லாஸ் ஏஞ்சல்ஸ்: பயணிகள் 461 பேருடன் சென்ற லுப்தான்சா விமானத்தில், பயணி ஒருவரின் ஐபேட், இருக்கை நடுவில் சிக்கிக்கொண்டது. அது வெடிக்கும் அபாயம் இருப்பதை உணர்ந்த பைலட், விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.


லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து ஏப்ரல் 23ம் தேதி இரவு மியூனிச் நோக்கிச் சென்ற லுப்தான்சா விமானத்தில் 461 பயணிகள் சென்று கொண்டிருந்தனர். ஒரு பயணியின் ஐபேட் இருக்கையில் சிக்கி கொண்டது.

விமானம் பயணத்தை துவங்கி மூன்று மணி நேரம் கழிந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.
பயணியும், விமான ஊழியர்களும் அதை இருக்கை நடுவில் இருந்து அகற்ற எவ்வளவு முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை.


இருக்கையின் அசைவு காரணமாக ஐபேட் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டது. அதில் இருக்கும் பேட்டரி தீப்பிடிக்கவோ அல்லது வெடிக்கவோ வாய்ப்பு உள்ளதாக விமானி கருதினார்.
இதனால் விமானம் பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
டேப்லெட்டுகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பொதுவாகக் காணப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள், சேதமடைந்தால் கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து லுப்தான்சா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் பாஸ்டனில் தரையிறக்கப்பட்டது. மின்னணு சாதனத்தால் ஏதும் விபத்து ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய விமானத்தை தரையிறக்கும் முடிவு எடுக்கப்பட்டது. தொழில்நுட்பக் குழுவினர் ஐபேடை பத்திரமாக மீட்டுக் கொடுத்தனர். ஆபத்து இல்லை என்று உறுதி செய்த பிறகு மீண்டும் விமானத்தின் பயணம் தொடங்கியது, என்றார்.

Advertisement