அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

5

கான்பெரா: ''தற்போதுள்ள தலாய் லாமாவுக்கு பிறகு, திபெத்திய பவுத்த மதத்தை வழிநடத்த போகும் அடுத்த தலாய் லாமா யார் என்பது பற்றிய முடிவு ஜூலை மாதத்தில் வரக்கூடும்'' என்று மத்திய திபெத்திய நிர்வாகத்தின் தலைவர் சிக்யோங் பென்பா செரிங் தெரிவித்தார்.


நம் அண்டை நாடான திபெத், 1959ம் ஆண்டு முதல், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. பவுத்த மத தலைவரான தலாய்லாமா தான் இந்த நாட்டின் ஆட்சியாளர். ஆனால் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, தற்போதைய தலாய் லாமா, சிறுவயதாக இருந்த போதே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார். அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள், இந்தியாவில் வசிக்கின்றனர்.



இவர்கள், திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை. தங்களுக்கென நாடு கடந்த திபெத் அரசாங்கத்தை அமைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். தற்போது மத தலைவராக இருக்கும் தலாய்லாமா, 14வது தலாய்லாமா ஆவார். ''89 வயதை கடந்த அவர், தான் 90 வயதாகும் போது அடுத்த தலாய்லாமா பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்'' என்று ஏற்கனவே கூறியிருந்தார்.


வரும் ஜூலை மாதம் அவரது 90வது பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி நடக்கும் விழாவில், தன் காலத்துக்குப் பிறகு திபெத் நாட்டையும், திபெத் பவுத்த மதத்தினரையும் வழி நடத்தும் அடுத்த தலாய் லாமா பற்றிய அறிவிப்பை தலாய் லாமா வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை திபெத் மத்திய நிர்வாகத்தின் தலைவர் சிக்யோங் பென்பா செரிங் உறுதிப்படுத்தினார்.




இது குறித்து, சிக்யோங் பென்பா செரிங் கூறியதாவது: தலாய் லாமா பிறந்தநாள் விழா நிகழ்வுகளில் இந்திய அரசாங்க பிரதிநிதி ஒருவர் கலந்துகொள்வார். ஜூலை 6ம் தேதி முதல் ஒரு வருடம் நீடிக்கும். இந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக ஜூலை 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை தர்மசாலாவில் அனைத்து திபெத்திய புத்த பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் மதக் கூட்டம் நடைபெறும்.


இப்போதுள்ள தலாய் லாமா, தனக்குப் பிறகான தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்துவார். இவ்வாறு அவர் கூறினார். அடுத்த தலாய் லாமா தேர்வு பற்றிய அறிவிப்பு, திபெத், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement