பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்

2

பாரிஸ்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவிலும் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், பாக்., பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தக்க பதிலடி தருவதற்கு ஏற்பாடுகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு முன்னால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர்.


அப்போது, ''பாகிஸ்தானுக்கு அதன் சொந்த மொழியில் பதில் தர வேண்டும்'' என்று ஒரு போராட்டக்காரர் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்ற இந்திய வம்சாவளியினர் பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.


போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய தேசியக்கொடியை கையில் வைத்து இருந்தனர். பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்ற பதாகைகளை ஒரு சிலர் வைத்து இருந்தனர்.


அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம்



பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ''காஷ்மீரில் ஹிந்துக்களுக்கு எதிராக நடத்தும் பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டும்'' என்ற பதாகைகளை வைத்து இருந்தனர்.

Advertisement