சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து அரிசி ஆலைகளுக்கு, லாரியில் நெல் மூடைகளை கொண்டு சென்ற போது, அவை சாலையில் கீழே விழுந்து, நெல்மணிகள் சாலையில் கொட்டியதை பார்த்த பொதுமக்கள் கடும் வேதனை அடைந்தனர்.

தமிழகத்தில், சில மாதங்களாக சம்பா நெல் அறுவடை செய்ததில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து சரக்கு ரயிலின் 42 வேகன்களில், 2,000 டன் நெல் மூடைகள் நேற்று முன்தினம் புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்தன.

அவை லாரிகளில் அரவைக்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருக்கும்அரிசி ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து லாரிகள் புறப்பட்டு வெளியே பிரதான சாலையில் செல்லும் போது, ஒரு சில லாரிகளில் இருந்து, ஓரிரு நெல் மூடைகள் சாலையில் விழுந்து நெல் மணிகள் சிதறி கொட்டின.

இதனை கண்ட பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

மேலும், சாலையில் கிடந்த மூடைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சாலையில் சிதறி கிடந்த நெல் மணிகளை பொதுமக்கள் சிலர் அள்ளிச்சென்றனர்.

Advertisement