மண்ணால் தூர்ந்த வடிகால்வாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மதூர் ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க, 20 ஆண்டுக்கு முன் வடிகால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது, வடிகால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமலும், பிளாஸ்டிக் கழிவு கொட்டப்பட்டு மண் தூர்ந்த நிலையிலும் உள்ளது.

இதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தடையின்றி செல்ல முடியாமல் அங்கேயே தேங்குகிறது. அவ்வாறு தண்ணீர் தேங்கி வருவதால் அப்பகுதியில் தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், வடிகால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய தண்ணீர், அங்கேயே தேங்கி குடியிருப்பு பகுதியை சூழும் நிலை உள்ளது.

எனவே, வடிகால்வாயை தூர்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement