கோவிலுக்குள் சென்றவர்களுக்கு மிரட்டல் விழுப்புரம் அருகே 50 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோவிலுக்குள் சென்று வந்தவர்களை மிரட்டியதாக 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அருகே மேல்பாதி தர்மராஜா திரவுபதியம்மன் கோவில், இருசமூக மக்களிடையே ஏற்பட்ட தகராறில், கடந்த 2023ம் ஆண்டு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. பொதுமக்கள் செல்ல தடைஉத்தரவு போடப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவில், 2024ம் ஆண்டு மார்ச் மாதம் கோவில் திறக்கப்பட்டு, தனி அர்ச்சகர் மூலம் ஒருகால பூஜை நடந்தது.

ஐகோர்ட் உத்தரவின் பேரில், கடந்த 17 ம் தேதி தடை உத்தரவு ரத்து செய்து, அனைத்து சமூகத்தினரும் வழிபட கோவில் திறக்கப்பட்டது.

அன்று கோவிலை நிர்வகித்து வந்த தரப்பினர் கோவிலுக்குள் செல்லவில்லை. மற்றொரு தரப்பினர் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அன்று கோவிலுக்குள் சென்று வந்த தரப்பினரை, கோவில் நிர்வகித்து வந்த தரப்பினர் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, மேல்பாதியை சேர்ந்த கந்தன்,50; என்பவர் நேற்று வளவனுார் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், மேல்பாதி ஊராட்சி தலைவர் மணிவேல், 50; உட்பட 50 பேர் மீது திட்டுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

Advertisement