பஹல்காம் தாக்குதலில் என்.ஐ.ஏ., விசாரணை துவங்கியது! 'ரீல்ஸ்' எடுத்தவர் முக்கிய சாட்சி ஆனார்

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து என்.ஐ.ஏ., விசாரணையை துவக்கியது. சுற்றுலா பயணியருக்கு, 'ரீல்ஸ்' எடுத்து தரும் உள்ளூர், 'வீடியோகிராபர்' துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முழுமையாக, 'வீடியோ' பதிவு செய்துள்ளதை அடுத்து அவரை முக்கிய சாட்சியாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பசுமை பள்ளத்தாக்கில், கடந்த 22ல் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. இதையடுத்து என்.ஐ.ஏ., விசாரணையை துவக்கிஉள்ளது.
என்.ஐ.ஏ.,யைச் சேர்ந்த ஐ.ஜி., - டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., மேற்பார்வையில் விசாரணை துவங்கியுள்ளது. தாக்குதலை நேரில் கண்டவர்களிடம், அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
பைசரன் பசுமை பள்ளத்தாக்கின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சல்லடை போட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் நொடிக்கு நொடி விவரிக்கும்படி கூறி, பயங்கரவாதிகளின் திட்டத்தை முழுமையாக உள்வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில், உள்ளூரைச் சேர்ந்த வீடியோகிராபர் ஒருவர் முக்கிய சாட்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறார். பைசரன் பசுமை பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, 'ரீல்ஸ்' எனப்படும் சமூக ஊடக வீடியோ எடுத்து தரும் தொழிலை செய்து வரும் அவர், தாக்குதல் நடந்தபோது அங்கு இருந்துள்ளார்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும், மரத்தின் மேல் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொண்ட அவர், மொத்த தாக்குதலையும் வீடியோ எடுத்து உள்ளார். இது, விசாரணைக்கு உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வீடியோவை கைப்பற்றி என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மொத்தம் நான்கு பயங்கரவாதிகள் இரு குழுக்களாக பிரிந்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிதறி ஓட்டம்
அதன் விபரம்: சுற்றுலா பயணியருக்காக அமைக்கப்பட்ட சிற்றுண்டி கடைகள் இருக்கும் பகுதியில் இருந்து கடந்த 22ம் தேதி மதியம், 2:30 மணிக்கு இரு பயங்கரவாதிகள் வெளியே வந்தனர்.
அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த சுற்றுலா பயணியர் எந்த மதத்தினர்என கேட்டுள்ளனர். முஸ்லிம்கள் ஓதும் கலிமாவை கூறும்படி சொல்லி உள்ளனர். சொல்ல முடியாமல் தடுமாறியவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
முதலில் சந்தேகிக்கப்பட்டது போல, இது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு அல்ல. ஒவ்வொரு நபர்களுடனும் அவர்கள் உரையாடிய பின் குறிபார்த்து சுட்டுக் கொன்றுள்ளனர். முதலில் நான்கு சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டதும், அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பயணியர் அங்கும் இங்கும் சிதறி ஓடியுள்ளனர்.
அப்போது, 'ஜிப் லைன்' விளையாட்டு இருந்த பகுதியில் இருந்து வெளியேறிய மேலும் இரு பயங்கரவாதிகள் கூட்டத்தினரை நோக்கி சுட்டனர். சுற்றுலா பயணி ஒருவர் மற்றும் உள்ளூர்வாசி ஒருவரின், மொபைல் போன்களை பயங்கரவாதிகள் பறித்துச் சென்றுள்ளனர். அந்த எண்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவை, இதுவரை அணைத்து வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, ஏ.கே., 47 மற்றும் எம் - 4 துப்பாக்கிகளின் காலி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆப்கன் போர் முடிவுக்கு வந்தது முதல், பாக்., பயங்கரவாதிகள் எம் - 4 துப்பாக்கிகளை அதிகம் பயன் படுத்தி வருகின்றனர். இதில் இருந்தே இந்த தாக்குதலின் பின்னணியில் பாக்., இருப்பது உறுதியாகி உள்ளது.
ஆலோசனை
தாக்குதல் நடத்திய நான்கு பயங்கரவாதிகளில் ஒருவர் உள்ளூர்காரர். அவர் பெயர் அடில் தோக்கர். இவர், 2018ல் இஜ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து, பின் பாகிஸ்தானுக்கு சென்றதை உள்ளூர் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
அங்கு லஷ்கர் அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று, 2024ல் மீண்டும் காஷ்மீர் திரும்பி உள்ளார். அவர் தான் மற்ற மூன்று பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். இவ்வாறு முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 175 பேர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங்கை, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் சந்தித்து பேசினார். அப்போது பாக்., ராணுவத்தினரை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ராஜ்நாத் சிங்கிடம் அவர் விளக்கினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற மத்திய உள்துறை உத்தரவிட்டது. 'சார்க்' விசா வைத்துள்ளோர், ஏப்., 26க்குள்ளும், மருத்துவ விசா வைத்துள்ளோர் ஏப்., 29க்குள்ளும் வெளியேற கெடு விதிக்கப்பட்டது.
நீண்ட நாள் விசா, துாதரக விசா வைத்துள்ளோருக்கு மட்டும் உடனடி வெளியேற்றத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி கடந்த இரு தினங்களில், 509 பாகிஸ்தானியர்கள் பஞ்சாபில் உள்ள அட்டாரி - வாகா எல்லை வழியாக வெளியேறி உள்ளனர். நேற்றும் நுாற்றுக்கணக்கானோர் வெளியேறினர்.
பாகிஸ்தானில் இருந்து 13 துாதரக அதிகாரிகள் உட்பட 629 இந்தியர்கள், அட்டாரி - வாகா எல்லை வழியாக நாடு திருப்பினர்.விமானம் வாயிலாகவும் பாகிஸ்தானியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பாக்.,கிற்கு நேரடி விமானம் இல்லாததால், அவர்கள் வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் தான் அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தானியர்கள் வசிப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. இங்கு மட்டும், 5,050 பேர் உள்ளனர். அதில் பெரும்பாலானோர் நீண்ட நாள் விசாவில் உள்ளனர். இவர்களில், 107 பேர் எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
தெலுங்கானாவில், 208 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஹைதராபாதில் உள்ளனர். கேரளாவில், 104 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இதில், 99 பேர் நீண்ட நாள் விசா வைத்துள்ளனர்.






மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!