சாக்கடையாக மாறிய கோயில் தெப்பக்குளம் பக்தர்கள் வேதனை

சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் கோயில் தெப்பக்குளம் சாக்கடையாக மாறியதால் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.

இப்பேரூராட்சியில் உள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் முன்பாக பழமையான தெப்பக்குளம் உள்ளது. சிறப்புமிக்க இக்குளத்திற்கு முதலைப்பள்ளம் என்ற பெயரும் உண்டு.

சில வருடங்களாக இக்குளத்தில் சாக்கடை, குப்பை தேங்கி புனித தன்மை மாசுபட்டு வருகிறது. நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இக்குளத்தை ஒட்டிய கால்வாயில் செல்லும்போது குளத்திலும் சாக்கடை கழிவு கலந்து விடுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குளம் முழுவதும் நிரம்பி விடுகிறது.

புனிதமான ஊருணி துர்நாற்றம் வீசி பக்தர்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. மழைகாலங்களில் சிலர் மீன்குஞ்சுகளை கொண்டு வந்து விட்டு விட்டு அவை வளர்ந்த பிறகு ரசாயனக்கலவை மூலம் தூண்டில், வலைகளை போட்டு மீன் பிடிப்பது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனாலும் குளம் மாசுபட்டு வருகிறது. விரைவில் இக்கோயிலின் வைகாசி திருவிழா நடக்க இருப்பதால் இந்த குளத்தில் கழிவு நீர், குப்பை சேராதவாறு துாய்மைப்படுத்துவதுடன், இதில் மீன் குஞ்சுகள் விடுவதையும் மீன்கள் பிடிப்பதையும் தடுக்க வேண்டும்.

Advertisement