பொதுக்கூட்டத்துக்கு தலா 500 பேரை அழைத்துவர டார்கெட்; காங்., மாவட்ட தலைவர்கள் புலம்பல்

மதுரை : சென்னையில் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மே 4 ல் நடக்கும் பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் தலா 500 பேரை அழைத்து வரவேண்டும் என்ற உத்தரவால் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி ஆட்சி கோஷம் வலுத்து வருகிறது. வி.சி.க.,வை அடுத்து காங்கிரசிலும் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஆனால் தி.மு.க., விசுவாசத்தால் செல்வப்பெருந்தகை மட்டும் அடக்கி வாசிப்பது அக்கட்சியினரை அதிருப்தியடைய வைத்துள்ளது.
ஆனால் கூட்டணி ஆட்சி என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தால்தான், கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளாவது ஒதுக்க தி.மு.க., முன்வரும் என்பதை உணர்த்தும் வகையில் தமிழக காங்., மூத்த தலைவர்கள் சிலர் அகில இந்திய தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாநில அளவிலான பொதுக் கூட்டத்தை செல்வப்பெருந்தகை ஏற்பாடு செய்துள்ளார். இதில் அதிக எண்ணிக்கையில் கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 72 மாவட்டத் தலைவர்களும் குறைந்தது தலா 500 பேரை அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 500 பேரை அழைத்து சென்றால் எவ்வளவு செலவு ஏற்படும், அதை எவ்வாறு சமாளிப்பது என மாவட்ட தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: மூத்த நிர்வாகிகள் பலர் மாநில தலைவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இவரது செயல்பாடுகள் குறித்து அகில இந்திய தலைமைக்கு தொடர்ந்து ஆதாரங்களுடன் தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் தன் கட்டுப்பாட்டில்தான் தமிழக காங்., உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் மே 4 கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் 'கோஷ்டி' தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்கு இதுவரை 'கிரீன் சிக்னல்' அளிக்கவில்லை.
மேலும் 500 பேரை அழைத்து சென்றால் எவ்வளவு செலவாகும், அதை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் உள்ளனர். இந்நிலையில் '500 பேரை அழைத்து வரும் மாவட்ட தலைவர்களுக்கே வரும் தேர்தலில் எம்.எல்.ஏ., சீட்டுக்கு பரிசீலிக்கப்படும்' என, சென்னை நிர்வாகிகள் சிலர் அலைபேசி மூலம் மாவட்ட தலைவர்களிடம் பேசி உசுப்பேத்தி வருகின்றனர். இதனால் குழப்பமாக உள்ளது என்றனர்.





மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!