உத்தவ் - ராஜ் கைகோர்ப்பு முடிவு: எளிதல்ல என்கின்றனர் கட்சியினர்

1

மும்பை : 'மஹாராஷ்டிராவின் நன்மைக்காக கசப்புகளை மறந்து கைகோர்க்க தயார்' என, உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே சகோதரர்கள் நெருங்கி வந்தாலும், தனிப்பட்ட முறையிலும், அமைப்பு ரீதியிலும் பல தடைகளை கடக்க வேண்டி இருப்பதாக இருகட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


சிவசேனா கட்சி நிறுவனரான பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. பால் தாக்கரே மறைவுக்கு பின் கட்சியை வழிநடத்தி வருகிறார். பால் தாக்கரேவின் சகோதரர் மகனான ராஜ் தாக்கரேவும் சிவசேனாவில் அங்கம் வகித்தார். உத்தவ் - ராஜ் இடையே குடும்ப அளவிலும், அரசியலிலும் பனிப்போர் இருந்து வந்தது.


இது தீவிரம் அடைந்ததை அடுத்து, 20 ஆண்டுகளுக்கு முன் சிவசேனாவில் இருந்து வெளியேறிய ராஜ், எம்.என்.எஸ்., என்றழைக்கப்படும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற புதிய கட்சியை துவங்கினார்.


அப்போது முதலே, உத்தவ் - ராஜ் எலியும், பூனையுமாகவே உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையின்படி, மஹாராஷ்டிர பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக கற்க மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.


இதற்கு உத்தவ் - ராஜ் இருவருமே எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலம் தழுவிய போராட்டங்களை அறிவித்தனர். ஹிந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது என்றனர்.


மஹாராஷ்டிராவின் நலனுக்காக சகோதரர் உத்தவ் உடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே சமீபத்தில் அறிவித்தார். இதற்கு உத்தவும் பச்சை சிக்னல் கொடுத்தார். மாநில நலனே முக்கியம். தேவைபட்டால் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.


இது இரு கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், கட்சியையும், தங்கள் தலைவர்களின் குடும்பங்களையும் நன்கு அறிந்த தலைவர்கள் சிலர், நடைமுறை சிக்கல்களை வரிசைப்படுத்த துவங்கியுள்ளனர்.


சிவசேனாவை பொறுத்தவரை, பால் தாக்கரே இருந்தவரை அவரது மனைவி மீனா திரை மறைவில் இருந்து கட்சியை ஆட்டுவித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்போதும், உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே மனைவியர், கட்சியின் முக்கிய முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது.


எனவே தான், உத்தவ் - ராஜ் இணைப்பு செய்தி கசிந்ததும், 'ராஜ் உடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ள உத்தவ், இது குறித்து மனைவி ராஷ்மியுடன் கலந்தாலோசித்தாரா?' என, பா.ஜ.,வைச் சேர்ந்த அமைச்சர் நிதேஷ் ரானே கேள்வி எழுப்பினார். 'கைகோர்க்க தயார் என சொல்வது எளிதாக இருந்தாலும், அதை செய்வது மிக கடினம்' என, இரு கட்சியிலுமே குரல்கள் எழத் துவங்கியுள்ளன.


'ஒருவேளை இணைந்தாலும் மும்பையில் தொகுதிப் பங்கீடுகள் எப்படி இருக்கும் இரு கட்சிகளுமே வலுவாக உள்ள தாதர், வோர்லி போன்ற தொகுதிகள் யாருக்கு ஒதுக்கப்படும்' என, எம்.என்.எஸ்., தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், மராத்தி ஹிந்துத்வா தலைவராக ராஜ் தன்னை முன்னிலைப்படுத்தி உள்ளார். முஸ்லிம்களையும் உள்ளடக்கிய கட்சியாக உருவெடுக்க உத்தவ் விரும்புகிறார். இது எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.


'மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கியை அகற்ற வேண்டி எம்.என்.எஸ்., போராட்டம் நடத்தியபோது, 17,000 தொண்டர்களை அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே கைது செய்தார். அவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்க தயாரா' என, எம்.என்.எஸ்., மும்பை தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.


இணைய தயார் என பொதுவாக அறிவித்து விட்டு இருகட்சி தலைவர்களுமே குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டனர். அவர்கள் திரும்பி வந்ததும் தான், அது சாத்தியமாகுமா அல்லது வாய் வார்த்தையா என்பது தெரியவரும்.

Advertisement