விமானத்தில் குண்டு மிரட்டல்; கனடா நாட்டு பயணி கைது

வாரணாசி : வாரணாசியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கனடா நாட்டுப் பயணியை, போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி விமான நிலையத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருக்கு ஏராளமான பயணியருடன் இண்டிகோ விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் பயணித்த வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த நபர், திடீரென தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.

இதனால் சக பயணியர் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே சுதாரித்த விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததுடன், விமான நிலையத்தில் உள்ள தனிமையான இடத்தில் அந்த விமானத்தை நிறுத்தினார். இதையடுத்து, பயணியர் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு குழு, விமானம் முழுதும் சோதனையிட்டது. எனினும், வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படாததால், அது பொய்யான தகவல் என தெரியவந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை அந்த விமானம் காலதாமதத்துடன் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே, வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்த கனடா பயணியை, விமான நிறுவனத்தின் ஊழியர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement