கம்பராயப் பெருமாள் கோயிலில் ரூ.1.50 கோடியில் தங்கும் விடுதி கம்பம் எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

கம்பம்: சபரிமலை செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கம்பராயப் பெருமாள் கோயிலிற்கு சொந்தமான காலி இடத்தில் ரூ.1.50 கோடியில் தங்கும் விடுதி கட்ட எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு ஹிந்து சமய அறநிலைய துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களிலும், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் 5 நாட்களிலும் சபரிமலைக்கு கம்பம் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள், கம்பத்தில் தங்கி சுருளி அருவிக்கு சென்று குளித்துச் செல்கின்றனர்.

அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு தங்குவதற்கு போதிய வசதி இல்லை.

மேலும் பென்னிகுவிக் மண்டபம், தேக்கடி போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் தங்குவதற்கு சரியான விடுதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகும்.

இங்கு ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடைபெறும் பூஜையில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வந்து செல்கின்றனர்.

இவர்களின் வசதிக்காகவும், கோயிலின் வருவாயை அதிகரிக்கும் நோக்குடனும் கம்பராயப் பெருமாள் கோயிலிற்கு சொந்தமான காலி இடத்தில் தங்கும் விடுதி கட்ட ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று தங்கும் விடுதி கட்ட ரூ.1.50 கோடி அனுமதிக்கப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement