பேராசிரியரை தாக்கிய மூன்று பேர் கைது

ஜே.ஹெச்.பி.சி.எஸ்., லே - அவுட்: குப்பையை சாலையில் வீசியதை தட்டிக்கேட்ட கல்லுாரி பேராசிரியரை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு தயானந்தா சாகர் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அரபிந்தோ குப்தா. ஏப்., 21ம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

குமாரசாமி லே - அவுட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஜே.ஹெச்.பி.சி.எஸ்., லே - அவுட் பூங்கா அருகே செல்லும் போது, அவரை கார் ஒன்று முந்தி சென்றது.

காரில் இருந்தவர்கள் சாலையில் குப்பை, பாட்டில்களை கொட்டினர். இதனால் குப்தா சற்று தடுமாறினார். கார் அருகில் சென்று, அவர்களுக்கு புத்தமதி கூறினார்.

இதனால் கோபம் அடைந்த மூவரும், காரில் இருந்து இறங்கி, குப்தாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர்.

குமாரசாமி லே - அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பானுபிரசாத், 26, சரத், 23, அம்ரித் குமார், 24, ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement