பஸ்கள் எங்கு வருகிறது என்பதை கண்டறிய கே.எஸ்.ஆர்.டி.சி., வசதி

பெங்களூரு: தாங்கள் பயணிக்க வேண்டிய கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் எங்குள்ளது என்பதை மொபைல் செயலி மூலம் தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்படுகிறது.

இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:

பயணியரின் வசதிக்காக, கே.எஸ்.ஆர்.டி.சி., பல வசதிகளை செய்கிறது. தாங்கள் பயணிக்க வேண்டிய பஸ், எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள, வி.டி.எம்.எஸ்., எனும் 'வெஹிக்கிள் டிராக்கிங் அண்ட் மானிட்டரிங் சிஸ்டம்' சாதனம் பொருத்தப்படுகிறது.

இது பஸ்கள் எந்த இடத்தில் பயணிக்கின்றன, எந்தெந்த நிறுத்தங்களில் நிற்கின்றன என்பதை, தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் 8,800 பஸ்களில் வி.டி.எம்.எஸ்., சாதனம் பொருத்தப்படும். இதற்காக டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சாலைகளில் இறக்கப்பட்ட 1,400 புதிய பஸ்களில், இத்தகைய தொழில்நுட்பம் உள்ளது.

இதை மொபைல் செயலியுடன் இணைக்க வேண்டும். மற்ற பஸ்களில் வி.டி.எம்.எஸ்., பொருத்தும் பணிகள், ஆகஸ்டில் முடியும்.

வி.டி.எம்.எஸ்., அவசர எச்சரிக்கை பட்டன்கள் கொண்டிருக்கும். ஒவ்வொரு பஸ்சும் எந்த இடத்தில், நிறுத்தத்தில் நிற்கின்றன என்ற தகவல், டிராக்கிங் சிஸ்டம் மூலமாக கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும்.

பயணியருக்கும் பாதுகாப்பாக இருக்கும். இதை மனதில் கொண்டு, 30 கோடி ரூபாய் செலவில் வி.டி.எம்.எஸ்., சாதனம் பொருத்தப்படும்.

இது லட்சக்கணக்கான பயணியருக்கு, மிகவும் உதவியாக இருக்கும். பஸ்கள் எங்குள்ளன, குறிப்பிட்ட நிறுத்தத்துக்கு வந்தடைய எவ்வளவு நேரமாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கே.எஸ்.ஆர்.டி.சி., எப்போதும் புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதில், முன்னணியில் உள்ளது. இப்போது வி.டி.எம்.எஸ்., பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement