அம்மாபேட்டையில் டோல்கேட் அமைக்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

பவானி: சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை (என்.ஹெச்.544) வழியாக செல்லும்போது, சேலம் மாவட்டத்தில் ஓமலுார், வைகுந்தம் என இரு கட்டண டோல்கேட்டை கடந்து செல்ல வேண்டும். ஆனால், தொப்பூரிலிருந்து பிரிந்து மேட்டூர், பவானி வழியாக சேலம், கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகரில் இணையும் சாலையில் வாகனங்கள் சென்று, இரு சுங்கச்சாவடிகளை தவிர்த்து பயணித்தன. இதனால் துாரம் குறைந்ததுடன், டோல்கேட் இல்லாததால் கட்டணமின்றி சென்று வந்தன.

இதை எப்படியோ கண்டுபிடித்து விட்ட அதிகாரிகள், ஈரோடு, பவானி, மேட்டூர், தொப்பூர் வரையிலான, 85 கி.மீ., தொலைவுக்கான மாநில நெடுஞ்சாலையை, தேசிய நெடுஞ்சாலையாக (என்.ஹெச்.544) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. இதனால் ஏற்கெனவே இருந்த தார்ச்சாலை தலா, 1.50 மீட்டர் துாரத்துக்கு அகலமாக்கினர். சாலையில் தொப்பூர் மற்றும் அம்மாபேட்டையில், டோல்கேட் அமைக்கப்படும் என அறிவித்தது. அம்மாபேட்டையில் டோல்கேட் கட்டுமான பணியும் முடிந்து விட்டது. இதற்கு மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், பவானி அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கருப்பண்ணன் தாக்கல் செய்த மனு கடந்த, 7ல் நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் நர்மதா சம்பத், இருவழிச்சாலையை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 4,௦௦௦க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மக்கள், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே டோல்கேட் அமைக்க கூடாது. இங்கு டோல்கேட் அமைக்க கூடாது என வாதாடினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், 2023ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு பின் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். சாலை விரிவாக்க பணிக்காக, 4,௦௦௦ மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதை தீவிரமாக கவனத்தில் கொள்ளப்படும்.

இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். இதற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் விசாரணையை ஏப்., 28ம் தேதி ஒத்தி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் பவானி தொகுதி மக்கள், நீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement