பயங்கரவாதிகள் பயன்படுத்திய சீன செயலிகள்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த,22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்,26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்; கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது:
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தங்களை ஏவியவர்கள் வசிக்கும் பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்ள,சீன தயாரிப்பு மொபைல் போன் செயலிகளை பயன்படுத்தியுள்ளனர்.
அந்த செயலிகளுக்கு, இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் பரிமாறப்படும் தகவல்களை விசாரணை அமைப்புகளால் கையாள முடியாது என்பதால், பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் நடந்த நாளில், அந்த பகுதியிலிருந்து, சீன தயாரிப்பு சேட்டிலைட் போன் ஒன்றை அங்கிருந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இவற்றை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
