கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம்: கேரளாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலமாக முக்கிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அரசு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தலைமை செயலகம், போக்குவரத்து ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


பிரதமர் மோடி மே 2ம் தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே, கடந்த சில வாரங்களாக மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. குறிப்பாக, திருவனந்தபுரத்தில் மட்டும் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்பிறகு, இது வதந்தி என தெரிய வந்தது.


இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement