வங்கதேச பவுலர்கள் அசத்தல்: ஜிம்பாப்வே அணி தடுமாற்றம்

சாட்டோகிராம்: வங்கதேச பவுலர்கள் அசத்த, ஜிம்பாப்வே அணி ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது.
வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வென்றது. சாட்டோகிராமில் 2வது டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் (21), பென் கர்ரான் (21) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பொறுப்பாக ஆடிய நிக் வெல்ச் (54), சீன் வில்லியம்ஸ் (67) அரைசதம் கடந்தனர். கேப்டன் கிரெய்க் எர்வின் (5) ஏமாற்றினார்.
தைஜுல் 'சுழலில்' வெஸ்லி மாதேவரே (15), வெலிங்டன் மசகட்சா (6), ரிச்சர்ட் (0) சிக்கினர். ஒருகட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்து நல்ல நிலையில் இருந்த ஜிம்பாப்வே, அடுத்த 49 ரன்னுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்தது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 227 ரன் எடுத்திருந்தது. டிசிகா (18), முஜரபானி (2) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் தைஜுல் 5, நயீம் ஹசன் 2 விக்கெட் சாய்த்தனர்.