மே 3ம் தேதி தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்
சென்னை : தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், மே 3ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்.
தி.மு.க., ஆட்சி, மே 5ல், ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
அதையொட்டி, ஆட்சி யின் சாதனைகளை, பொதுமக்களிடம் விளக்க, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து விவாதிக்க, மாவட்ட செயலர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ஒன்றியங்களை இரண்டாக பிரித்து, புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து, தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, ஏற்கனவே அறிவாலயத்தில் விவாதித்து பட்டியலை தயாரித்துள்ளது.
அப்பட்டியலில் உள்ள ஒன்றியங்களின், புதிய நிர்வாகிகளின் அறிவிப்பை வெளியிட, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
மேலும், அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம், கருத்தரங்கு நடத்துவது குறித்து, விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.